”மதில்கள் என்ற பெயரில் ஒரு சிறிய காதல் கதையை நீங்கள் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!” என்று ஆரம்பிக்கிறது… இல்லை ஆரம்பிக்கின்றன அவை… மதில்கள் பன்மைதானே..
சிறியதா?! இதுவா?! ஆமாம், அளவு அடிப்படையில் பார்த்தால் 52 பக்கங்கள், அதிலும் இடையிடையே ஓவியங்கள் அதைச் சுற்றி ஒரு சிறை அனுபவம், கஞ்சியை அனுபவித்துச் சாப்பிடக் கற்றுக் கொடுத்த அனுபவம், ரோஜாக்களை, மனிதர்களை நேசித்த அனுபவம், எல்லாம் மீறி அதிலிருந்த காதல், நுண்ணுணர்வு மிகச் சிறிய, நுண்கதைதான், சின்னஞ்சிறிய புத்தகம்தான்.
ஆயுர்வேதத்தில் க்ஷீரபலா என்றொரு தைலம் உண்டு. பாலில் ஒவ்வொரு மூலிகையாகச் சேர்த்து நூறு தடவை சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு சிறிய குப்பியில் அடைத்திருப்பார்கள்.
இதை என்னிடம் சொன்னது ஒரு பெங்காளி மருத்துவர். ஸீ… ஐ ஹேவ் ஸீன் திஸ், ஐ மைசெல்ஃப் வெண்ட் தேர் டு ஸீ தட், அமேஸிங், யூ நோ, ஒன் ஸ்டெப், டூ ஸ்டெப், த்ரீ ஸ்டெப், ஃபோர் ஸ்டெப்…….. எய்ட் ஸ்டெப்… என்று விட்டு திரும்ப ஃபோர்ட்டி ஒன்… ஃபோர்ட்டி டூ… ஃபோர்ட்டி த்ரீ… நிறுத்தி விட்டு மீண்டும், ஃபிஃப்ட்டி ஒன்… ஃபிஃப்ட்டி எய்ட் வரைக்கும் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, நல்ல வேளையாக நிறுத்திக் கொண்டார். நான் வயித்திலிருந்த சிரிப்பை கை வைத்து அழுத்தி அடக்கிக் கொண்டிருந்தேன்.
மொத்தத்தில் க்ஷீரபலா ஒரு மருத்துவ ஆச்சரியம் என்கிற வரையில் என் அறிவுக்கு எட்டியிருக்கிறது.
”மதில்கள்” படித்து முடித்த போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. சுண்டக் காய்ச்சிய ஷ்னாப்ஸில் இருந்து, க்ஷீரபலா வரைக்கும் ஏதேதோ ஒப்பீடுகள் மனதில் முட்டி மோதின.
வயிற்றைப் பிசையும் ஒரு காட்சியை, நெஞ்சை அடைக்கும் கதையைப் பகிரும்போது பெங்காளி மருத்துவர் ஹாஸ்யம் தேவைதானா, என்று கேள்வி வரும்போதே ஏன் கூடாது என்று நான் கேட்கவில்லை, பஷீர் கேட்க வைக்கிறார்.
”சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை நான் ஒருபோதும் வீணாக்கியதில்லை. மானுட குலத்துக்கான கடவுளின் பிரத்தியேக வரம் இந்தச் சிரிப்பு.”
”இவ்வளவு அவசரமா எங்க போறீங்க? இந்தப் பூகோளத்திலிருந்து?” நான் கேட்டேன்.
வார்டர் பதில் சொல்லவில்லை. நடக்கிறார். நான் சொன்னேன்:
”என்னை ஏதாவது பொந்துக்குள்ளே கொண்டுபோய் அடைச்சிட்டு ஓடிப்போய் ஒரு பெரிய வியாபாரத்தை முடிக்கணும் இல்லையா?”
என்னவென்று கேட்டால் சங்கதி கொஞ்சம் தீவிரமானதுதான்…
ம்ம்ம்ம்… இப்படிக் கதை சொன்னால், யார்தான் வாய் பிளந்து கேட்க மாட்டர்கள்.
அந்த மனசை, அதிலிருந்து ப்ரவாகமாகக் கிளம்பும் ரசனை மொழியை எல்லாவற்றையும் எடுத்து நாராயணி மார்புக்குள் ரோஜாக்களை ஒளித்து வைப்பது போல், மார்புக்குள் இறுக்கிக் கொள்ளத் தோன்றுகிறது.
முன்பு.. கோடானு, கோடி காலங்களுக்கு முன்பு… ஆதியில் ஏதேன் தோட்டத்தில் கண் விழித்தபோது அனுபவித்த ஏவாளின் அற்புதமான மணம்….
விழித்திருக்கும் ஆன்மா… விரியும் நாசித் துவாரங்கள்.. வெடிக்கப் போகும் இதயம்… பெண்ணே…
ஒரு சின்ன கிராமம். அதற்கு அப்பால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு வெறும் பொடி மணல் மண்டிய பாலைவனம். தொடுவானம்… விரிந்த தொடுவானம்…………… சுற்றிலும் வெண்பட்டை விரித்துப் போட்டதுபோல மணற்பரப்பு மட்டுமே… அந்த மகா பிரபஞ்சத்தின் நட்ட நடுவில் தனியாக நான்… தனியாக… தலைக்கு மேலே கை நீட்டித் தொட்டுவிடும்
உயரத்தில் தெளிந்த முழு நிலா.
உயரத்தில் தெளிந்த முழு நிலா.
கழுவிச் சுத்தம் செய்த நீல வானம்.
முழுநிலாவும் நட்சத்திரங்களும்.
மிகுந்த பிரகாசத்துடன் மின்னும் நட்சத்திரங்கள். கோடி… அனந்தகோடி… எண்ணிக்கையில்லாத நட்சத்திரங்கள்.
முழுவட்டமான நிலவு.
அமைதிப் பிரபஞ்சம்… ஆனால் என்னவோ… என்னவோ… திவ்யமான நிசப்த சங்கீதம் போல… நாத பிரமத்தின் முடிவில்லா சுழற்சி.
உலகமான உலகங்களையெல்லாம் படைத்தவனே, என்னைக் காப்பாற்று. எனக்குள் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னுடைய இந்தப் பெரும் கருணை.. இந்த மகா அற்புதம்.. நான் மிகச் சிறிய உயிரல்லவா? என்னால் முடியவில்லை… என்னைக் காப்பாற்று.
திரும்பத் திரும்பப் படித்தேன்.. திரும்பத் திரும்பப் படித்தேன்.. படிக்கிறேன்.. படிக்கிறேன்… திகட்டவில்லை… என்னாலும் முடியவில்லை. மதில்களைப் படைத்தவனே.. இந்த மதில்கள் எத்தனை அற்புத உலகம்… நான் ஒன்றுமேயில்லை… என்னாலும் முடியவில்லை… என்று அலறத் தோன்றியது… தோன்றுகிறது. இதைக் கேட்பவர்களுக்கு நாடகத் தன்மையாகத் தோன்றலாம். ஆனால் உணர்பவர்களுக்கு இப்படித்தான் இருக்க முடியுமென்று தோன்றுகிறது. கோடிப்ரகாசம்.. அந்த அனந்தத்தை தாங்கிக்கொள்ள முடியாது கேவல் வருகிறது.
ஆட்கள் கடந்து போன பட்டணத்தில் நான் மட்டும் தனித்து விடப்பட்டவன் போல… இல்லையென்றாலும் இந்தப் பெரும் உலகத்தில் தனியந்தானே. மேய விட்ட மந்தையிலிருந்து ஒரு ஆட்டை மட்டும் விடாமல் கட்டிப் போட்டிருக்கிறார்கள். எதற்காக? கசாப்புக்காகத்தான்.
மதில்களுக்கு ப்ரபஞ்சம் என்று பெயர் சூட்டி இருக்கலாம். என்னதான் இல்லை. எதைத்தான் அடக்கவில்லை இந்த நாவல். சுஜாதாவின் இயந்திராக்களையும், சயன்ஸ் ஃபிக்ஷனயும் தயவுசெய்து தனியே விடுங்கள்.
நகுலனின் நினைவுப் பாதையில்… “உன் நாவல் குறைந்தது முந்நூறு பக்கமாவது இருக்க வேண்டும் என்று சொன்னானா?! ….. தரம் தரமின்மை பற்றிப் பேச்சிருக்கட்டும். … பணம் கொடுத்து வாங்குகிறவனுக்கு ஒரு அரை மணி நேரமாவது படிப்பதற்கு சரக்கு வேண்டும்…” என்று சிவராஜன் சொல்வதாக ஒரு உரையாடல் வரும்… நகுலனின் கிண்டலான நடையும்… முக பாவமும் மனக்கண்ணில் தோன்றும்.. கூடவே உதடுகளில் சிறு புன்னகை வரும்…
பஷீர் படித்த போது அதுதான் தோன்றியது. அளவை வைத்து அளவுகோல் போட முடியுமா? கடுகின் அளவை வைத்து அதன் காரத்தை அளவிட முடியுமா?
எல்லாம் மீறி அந்தக் காதல். அது பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கலாம். எனக்கு அந்த மனங்களின் நிர்வாணம், அந்தக் காதலின் நிர்வாணம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டது.
ஊடல் கலந்த வேதனையுடன் நாராயணி சொன்னாள் “பாருங்க, கல்லு என்னோட முலைமேல வந்து விழுந்துடுச்சு.”
நான் கேட்டேன் “வலிச்சுதா?”
நாராயணி சொன்னாள் “நாம ஒரு தடவை பாத்துக்கிறதுக்கு என்ன வழி?!”
…………………………………
“என்னோட வலது கன்னத்துல கறுப்பா ஒரு மச்சமிருக்கு அதைப் பார்ப்பீங்களா?”
”அந்தக் கறுப்பு மச்சத்தில் துறுதுறுவென்று நான் முத்தமிட வேண்டும்”
கைகள் கட்டப்பட்டிருக்கும் தருணத்தில் கையருகிலிருக்கும் ரோஜாவை உணரும் குதூகலம்… தொட முடியாத் தவிப்பு… நாராயணி கேட்பது காதில் ஒலிக்கிறது… “நான் வாய் விட்டு அழட்டுமா?!”
கடைசியில்… “ஒய் ஷுட் ஐ பி ஃப்ரீ? ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?” … சுதந்திரமானவன். சுதந்திர உலகம். எது சுதந்திர உலகம்? பெரிய ஜெயிலுக்கில்லையா போகணும். யாருக்கு வேணும் இந்தச் சுதந்திரம்?”
ஜெயிலரைப் பார்த்துக் கேட்கும் பஷீர்… அந்தக் குரலின் பரிதவிப்பு… என்ன இது என்று விழிக்கும் அப்பாவித்தனம்… இனி என்ன செய்வதென்று புரியாது கையாலாகத் தனமாக நிற்கும் வழி தொலைந்த சிறுவன்…
யாருக்கு வேணும் சுதந்திரம்? காதலின் பிடியின் இருப்பவர்கள் அவர் காதலரிடத்திலும் இப்படித்தான் கேட்டிருப்பார்களாயிருக்கும்…
நீல ஆகாயத்தில் கம்பு உயர்ந்தது. …………….. என்ன செய்வது?!
இங்கேயே இரு வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு ஏதோ ஒரு இராட்சத லாரியினடியில் அடிபட்டு உயிரை விட்டு… ஆவியாகி.. அவளுக்கு இதை எப்படித் தெரியப்படுத்துவது என்றபடி அவளையே சுற்றிச் சுற்றி வரும் உருவமற்ற, அநாதரவான ஒரு ஆவி, ஒரு உயிர், ஒரு ஆத்மா போன்று.. பஷீர்….. மற்றும் நான்…. சுற்றியபடியே….

18 ஊக்கம்::
நல்ல விமர்சனம்.
வாசிப்பனுபவத்தை வாசிப்பதே ஒரு ஆனந்தானுபவமாயிருக்கிறது. நாம் ரசித்த, நம் அடைந்த அதே பரவசத்தை இன்னொருவரும் அடைந்து பகிரும்போது அந்த உணர்வே அலாதியில்லையா? பஷீரின் எழுத்து எளிமையாக ஆனால் கம்பீரமாக இருப்பது போலவே அந்த எழுத்தை உட்சுமந்து வந்த இந்த அனுபவமும் ரசனை. நல்ல பகிர்வு. அருமையான தொடக்கம். தொடரட்டும்..
@கும்மாச்சி
நன்றி கும்மாச்சி..
@வானம்பாடிகள்
நன்றி பாலா சார்..
வெல்கம் பேக் :D
நானும் மதிலுகள் படிச்சிட்டேன்....ஆனா நீங்க எழுதிருக்கது படிச்சிட்டு இன்னொரு தடவை படிக்கணும் போலருக்கு...
முக்கியமா எனக்கு தோன்ற கேள்வி, இந்த நாவலுக்கு ஏன் மதிலுகள்னு தலைப்பு? அங்க ஜெயில்ல ஒரு மதில் தான் இருக்கு....ஆனா மதிலுகள்னு ஏன் சொல்லணும்? இன்னொரு தடவை படிச்சிட்டு சொல்றேன்.....
, பதினொன்றின்இரண்டு அருமை. வாசித்ததை எல்லாம் இப்படி பகிர்ந்து கொள்ள உங்களால் முடிகிறது. தொடருங்கள்
வணக்கம் ப்ரியா.
சுகந்தானே. ஒரு வருட இடைவெளியை மறக்கடிக்கும் பகிர்வு.
”மதில்கள்” - வாங்கனும். வாசிக்கனும்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
மதிலுகள் நாவல் திரைப்படமாகவும் வந்துள்ளது. மம்முகுட்டி நடித்துள்ளார்.
@அது சரி(18185106603874041862)
நன்றி :D... ம்ம்.. இன்னொரு வாட்டி படிங்க.. படிச்சுட்டு நீங்களும் எழுதலாம்ல...
அந்த ஜெயில்ல ஒரு மதில்தான் இருக்கு...
நாடெல்லாம் ஏராளம் பஷீர்... நாராயணி... ஜெயில் (வீடெல்லாம் கூட ஜெயில் ஆகலாம்..) அப்புறம் மதில்...கள்...
@Mahi_Granny
நன்றி மஹி.. ம்ம்.. ஆனதை முயற்சிக்கறேன்..
@சத்ரியன்
நன்றி சத்ரியன்... நல்லாருக்கேன்... வாசிங்க... :)
@Rathnavel
நன்றிங்க ரத்னவேல்..
@Dr. P. Saravanan
நன்றி சரவணன்... ஆமாம் அந்தத் திரைப்படமும் பார்த்தேன்.. மம்முட்டி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்... மிக இயல்பாகச் செய்திருக்கிறார்...
புத்தகத்திலுள்ள பஷீருக்கும் திரைப்படத்திலுள்ள பஷீருக்கும் தோற்றத்தில்தான் சிறு வேறுபாடு... மற்றபடி கச்சிதம்..
ஆனாலும்.. புத்தகம் படித்திருக்காவிட்டால்... அந்தத் திரைப்படம் பார்க்கும்போது பொறுமை இழந்திருக்கலாம்.. நல்ல வேளை..
I am waiting for kavithai.
kavujapithan
@குடுகுடுப்பை
=)))... like this spirit.. very much..
அனுபவித்து எழுதிய நல்ல பகிர்வு.. பஷீர் இதுவரையும் படித்ததில்லை... படிக்கோணும்..
@க.பாலாசி
நன்றி பாலாசி... படி படி.. :o))
Post a Comment