ஐரோப்பாவிற்கு
என்னை நாடு கடத்தியபோது
ருவாண்டாவில்
இனப்படுகொலை
மில்லியனுக்கு
சில ஆயிரங்கள் குறைவான
எண்ணிக்கையிலிருந்தது...
எரிபொருள் நிமித்தம்
அபுதாபியில் விமானம்
தரை தொட்டபோது
ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது..
நெதர்லாந்தின்
மின்சாரப் படிக்கட்டில்
விழுந்த போது நீட்டப்பட்ட
கொழுத்த கையின் மேல்
மும்பாய் மீது பறந்தபடி
முதல் முறையாக
நான் குடித்த கறுப்புக் காப்பியை
எட்டாவது தடவையாக
வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன்...
சென்ற வருடம் பேருந்தொன்றின்
முன் சக்கரத்திற்கு நாலு அடி முன்னால்
நடுவீதியில் கால் நீட்டிப் படுத்திருந்தபோது
என் தலைமாட்டில் கால் உதைத்து
உலகமே கண்ணைத் திறந்து கொள்..
இலங்கையில் இனப்படுகொலை
இலட்சத்தை எட்டிவிட்டதென்றார்கள்
எழுந்து உட்கார்ந்து உதைத்த கால் மேல்
ஒன்பதாவது தடவையாக வாந்தியெடுத்தேன்..
பக்கத்து வீட்டில் எட்டு ஆமைகள்
செல்லப்பிராணிகள்
டாண்டிலயன் பூ இல்லையென்றால்
உணவு இறங்காதாம்..
காட்டுக்கு நடையா நடந்த வழியில்
ருவாண்டாவில் இனத்தைத் தொலைத்த
கிளியொன்று மொழி பழகிக் கொண்டிருந்தது
அது உரைத்தது புரிய ஆரம்பித்தபோது
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான
என் பயண இடைவெளியில் தீர்ந்துபோன
ஆப்பிரிக்கக் கணக்குகளின் பெறுபேறு
கிட்டத்தட்டப் பூஜ்ய நிலையிலிருந்தது...
ஆஸ்திரேலியா விடு அமெரிக்கா
என்றதற்கு கிளி மூச்சு விடாது சிரித்தது..
சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்
உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்
_______________________________________________________
