header photo

Wednesday, May 23, 2012

”நில்”


பழக்கமே இல்லாத இந்தப்
பந்தயத்தில் நானுமிருக்கிறேன்
 
பறக்கும் புழுதி கண் மறைக்க
சொடுக் என்றால் 
ஓட ஆரம்பித்து விடுகிறேன் 

பதினேழோ பதினெட்டோ 
ஒரு இலக்கம் முதுகிலாடுகிறது

செய்வதறியாது 
நடுநடுவில் நிதானிக்கிறேன் 
இப்போதெல்லாம் 

இந்த மைதானம் எனக்கானதல்ல
எனினும் 
இன்றும் கூட 
அங்குதான் நின்றுகொண்டிருக்கிறேன்

முதுகிலாடும் இந்த இலக்கத்தை
முக்கால வரையறையற்று 
இல்லாதொழிக்க வழி
ஒன்றிருக்கிறது 

இனி எழுந்தே இருக்கப்போவதில்லையென
மண்ணைக் கெட்டியாகக் கவ்விக் கொள்ளலாம்

ஒரு கால் தூக்கி 
மெதுவே
முதலாவது முழங்கால் மடித்து.. 

Monday, May 14, 2012

பிறகென்ன

பாட்டியின் அடுக்களையில்
இதே எலிகளை 
அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்

யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை

ஆழிப் பேரலையில்
என்ன செய்யும் பாவம் 

கரையிலிருந்து ஒரு இரைச்சல்
அந்தோ என்றபடி வருகிறது

இந்த எலிகள் 
ச்சே.. பாட்டி வீட்டு எலிகளா இவை
இருக்கவே இருக்காது 
அவை போலிருக்கலாம்

ஆசுவாசப்படும்போதுதான் கவனித்தேன்
அந்த அந்தோ
இந்த எலிகளுக்கானதல்ல

அது வந்த வீச்சில் 
கடலில் குதித்து 
கீழ் நோக்கிச் செல்கிறது 

சமுத்திரத்தின் அடியில் 
அது இன்னும் 
கப்பலாகவே இருக்கிறது  

கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன


அவையா சுமந்தன இதை?