header photo

Tuesday, June 29, 2010

சுஹ.. ஐஸ்வர்ய.. விக்ரமாயணம்.. ராவணவதாரம் ... ஹூரே ராவணா...

டைட்டில்ல A MANI RATNAM FILM அப்டின்னு விதம் விதமான ஃபாண்ட் சைஸ்ல பளிச்சுன்னு போட்டுக் காண்பிச்சாலும்... நெசம்மாவா? மணி ஃபில்ம்மா?.. அந்தப் ஃபாண்ட் பார்த்தே பாழாப்போன டவுட்டு வந்து தொலைக்குது... ஹ்ம்ம்.. எல்லாம் பழக்கதோஷம்.. (ஆமா.. நான் ஆன்லைன்ல பார்த்ததால அப்டித் தெரியுதா..? இல்ல க்ராஃபிக் டிஸைனரோட ஆர்வக் கோளாறா..? மணிக்கு அது புடிச்சிருந்திச்சா..?!)

ச்ச்செரி.. அது கெடக்கு... ஆனா எனக்குப் படம் புடிச்சுதுங்க... ஏன் அப்டின்னு அசட்டுப்பிசட்டுன்னு கேக்கப்டாது.. நம்ம ஊர்ல பொங்கல் சாப்டறப்போ.. சில நேரத்தில திகட்டினாலும்.. அதில இருக்கிற முந்திரிப்பருப்பும்.. திராட்சை வத்தலும் பொறுக்கிச் சாப்டுறதுக்காகவே... மூணு வேளையும் பொங்கல்ப் பானையச் சுத்தி வர்ற சென்மமுங்க நானு.. 

ஹிஹி... நான் பெண்ணீயவியாதி இல்லைன்னாலும்... இங்க முதல்ல ஐஸுவ சொல்லியே ஆவணும்.. படம் ஆரம்பிக்கறப்போ.. சிறக விரிக்கிற அந்தக் கழுக பார்த்து மிரண்டுக்கிட்டே.. அதை க்யூட்டா பார்க்கறதில ஆரம்பிக்குது ஐஸுவோட அழகான கலக்கல்... 

"ஆம்பள கூடப் போராட வக்கில்ல".. என்று பயத்தை மறைத்துச் சீறும் போதும்..  "ஜயமுண்டு பயமில்லை மனமே.. ".. என்று பாரதியார் பாடலை அழுத்தி உச்சரிக்கும் போதும்.. கறுப்புத் துணியால்க் கட்டப்பட்ட கண்களை மீறி.. உதடுகளும்.. கன்னங்களும் வெளிப்படுத்தும் நடிப்பு... பப்பப்பப்பா... 

துப்பாக்கியைப் பார்த்து அசையும் நயனங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு.. "என்னைக் கொல்றதுக்கு நீ யாரு?"-லிருக்கும் ஆதங்கம்..  கடைசியாக.. விழுந்து கொண்டிருந்த விக்ரமை நோக்கி நீளும் கைவிரல்களின் பிடிவாதம்.. இயலாமை.. கைவிரல்கள்.. கண்ணிமை முடிகள்... எல்லாமே நடிக்கின்றன... காட்டுச்சிறுக்கி... மிகப் பொருத்தம்.. 

பக்பக்பக்.... டண்டண்டண்டண்... டண்டனக்கா.. டண்டனக்கா.. சுடுசுடுசுடு... விடுவிடுவிடு... போன்ற மேனரிஸம்.. மிகையாகத் தோன்றுவதற்கு... சுஹாசினியைப் பொறுப்பாக்கினால்... விக்ரம் கனகச்சிதம்... "ய்யேய்.. முட்டாப்பய மவளே" என்று பதைத்துப் போவதும்... "பதிவுற்ற குலசக்தி சரணுண்டு"  என்று நிறுத்திப் "பகையில்லை" என்று தொடர்வதிலிருக்கும் உச்சரிப்பிலிருக்கும் அழகும்.. "நீங்க கண்ணைத் திறந்த உடன என் உசிரு என் கிட்டத் திரும்பி வந்திருக்கக் கூடாது" என்று அந்த முரட்டு உருவத்தினூடு மென்மையாக அங்கலாய்ப்பதும்.. "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்.. "குருவம்மோய்.. குருவம்மோய்".. என்று சீண்டுவதும்.. ஃபன்டாஸ்ட்டிக்... 

ப்ருத்வி... பேபி ஃபேஸ் வச்சுக்கிட்டே.. இப்டி ஒரு குரூரம் வெளிப்படுத்த முடியுமென்று காண்பித்ததுக்கு சபாஷ்.. கை வெட்டுப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தவன் கையை நிமிண்டியபடி பேசும் ஒரு காட்சி போதும்.. யப்பா... ஆனா... இங்கயும் வசனமா.. இயக்கமா... என்ன கோளாறோ... கட்டிவைத்திருக்கும் ஒருவன் தொண்டை வறண்டு போக விளக்கம் சொல்லுவானாம்.. இவரு மெதுவா கேட்டுக்கிட்டே அடி அடியா எடுத்து வச்சு வருவாராம்.. அப்புறம் திடீருன்னு ஆயிரம் கிலோமீட்டர் ஓடி வந்த மாதிரி இளைச்சுக்கிட்டே.. "அவங்கள பாத்தீங்களா? எப்டி இருந்தாங்க?" என்று பதைபதைப்பாராம்.. டூ மச்.. செயற்கைத்தனம்... 

கார்த்திக்.. அடுத்த காமடி பீஸ்... வால் வைக்கல... சஞ்சீவி மலையைக் கைல கொடுத்து.. தூக்கச் சொல்லலை... மத்தபடி நாந்தேன் அனுமாரு அப்டின்னு காண்பிக்கறதுக்காக அவரு பறந்து பறந்து கிடைச்சதில எல்லாம் தொங்குவதும்.. கிரிகிரிகிரி உட்டாலங்கடி கிரிகிரிம்பதும்... எரிச்சல்..

"ஆட்ட வெட்டிச் சூப்பு வைக்கச் சொல்லுதீய.. நெஞ்செலும்பு சூப்பு வைக்கேன்".. "சோக்கடிச்சா சிரிக்கறதில்ல.. துப்பாக்கி காட்டினா பயப்டறதில்ல... என்ன வாழ்க்கைடா சாமி.." பிரபு க்யூட்... 

பிரியாமணி தைரியமா வந்து.. "மய்யிரு.. மாட்டிட்டேன்... ஏன் பேசப்டாதோ" .. என்று எகிறி.. "எல்லாம் போச்சு.." .. பரிதாபமா செத்துப் போறா... ரஞ்சிதா பரிதாபமா இருக்கா... ம்ம்.. 

அழகான லொகேஷன்.. அருமையான காட்சி அமைப்பு... ஒளிப்பதிவு.. அந்தச் சிலை.. மலை... அருவி... பள்ளத்தாக்கு... பாலம்.. காடு.. கழுகு... ஐஸ்வர்யா.. ஸ்க்ரீன் முழுக்க வியாபித்திருக்கும் விக்ரமின் பராக்கிரம முதுகு... எல்லாம் இருந்தும்... ஏதோ நெருடல்... திருப்தியாக இல்லை... என்னவோ மிஸ்ஸிங்.. .

என்னது? அப்டின்னு யோசிச்சா..ம்ம்... சுஹாசினி மேடம்ம்.. அவ்வ்வ்... படத்தைத் தூக்கி படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் நின்ற இடத்தில் நிறுத்த வேண்டிய கதை வசனம்... மொத்தத்தையும் அறுந்த பாலத்துடன் விழுந்த ப்ருத்வி நிலமைக்கு ஆளாக்கி விடுகிறது... "என் முடிவு உன் கைல இல்லை.." என்று சொல்லிவிட்டு ஆற்றில் விழுந்திருந்தா நச்-ன்னு இருந்திருக்குமா இல்லையா.. கூடவே... "நான் சாகமாட்டேன்..".. அப்டின்னும் எதுக்கு சொல்லணும்கிறேன்.. பாலத்தில தொங்குறப்போ... விக்ரம் ஐஸ் பத்தி நறுக்குன்னு ஒரு வார்த்தை நல்லதா சொன்னா போதாதா... வேற என்ன... "தங்கம்.."... வேற என்ன.. "வைரம்..".. அலுப்பா இருக்கு.. விக்ரம் சிரிக்க சிரிக்கப் பேசுவாரு அப்டிங்கிறாங்க.. அது எப்டின்னு அவரு நம்பியார் மாதிரி மிமிக்ரி செஞ்சு காண்பிக்கிறாரு... என்னாத்தச் சொல்ல.. 

ம்ம்... எப்டியோ.. ஆரம்பத்திலயே சொன்ன மாதிரி எனக்குப் படம் புடிச்சதுங்க.. ஆனா மணிரத்னம் சார்.. இவ்ளோ துணிச்சலா ஒரு கதைய சொல்றீங்க... ராவணன் பக்கத்தில இருந்து சொல்றீங்க... ரயில்ல சங்கிலிய புடிச்சு இழுத்து நிறுத்துற மாதிரி... நச்-ன்னு... முடிச்சிருக்கலாமின்னு எனக்கு ஒரே ஆதங்கமாத்தேன் இருக்கு... 

ஆனாலும்... ஹூரே ராவணா...~

__________________________________________________________________

Saturday, June 26, 2010

உயிர்மனக்குரல்..

சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும் 
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்து
அடங்கியமர்ந்து வேடிக்கை காட்டும் தருணம்.. 
உடலின் விளிம்புவரையெட்டியெட்டித் தொட்டுத்
தட்டியலையும் கண்ணாமூச்சியாட்டம் தாண்டும்
சொல்லாத எல்லை "செல்லாது"  வாவெனக் கூறி
மெல்லச் செல்லமாய்க் காதுபிடித்திழுத்திழுத்தமர்த்தும்
கருவிருப்பின் உயிரீர்ப்பு விசையின் திசைகாட்டும்
அருவுருவப் பலகையின் மேலொலிக்கும் அசரீரி
சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில் 
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... 

________________________________________________________________

திருநடமிடும் வாத்தியக் குயில்கள் மாதிரி ஒன்று வேணும் ப்ரியா, உரிமையுடன் கேட்கும் கயலுக்காக.. முயற்சி செய்தது.. 

________________________________________________________________

சில வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு ஆசானுக்கு எதிர்பாராத விதமாக cerebral haemorrhage ஏற்பட்டுச் சில வாரங்கள் கோமா நிலையிலிருந்து, முழுவதுமாக மீண்டு வந்து, சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கை என்பது தூங்கி விழிப்பது போன்றது, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் "வாழுங்கள்" என்று சொன்ன அந்தக் குரலும்,, அதன் தொனியும் மறக்கக் கூடியதன்று.. 

||சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி..|| சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.. 

அன்று வீட்டிற்கு வந்த போது வாகனம் தவிர்த்து நடந்து வந்து கொண்டிருந்தேன்.. 

||சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும் 
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் || 

நமக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கும்.. குசல விசாரிப்புகள்.. சில சமயங்களில் அப்பட்டமாகக் கவனிக்கலாம்... அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.. அதை வைத்து உங்களை இவ்வாறு இம்சை செய்யலாம்.. ம்ம்.. 
________________________________________________________________

Thursday, June 24, 2010

காதல்

சைக்கிளை முன்னிறுத்தி

கதை கதைத்தான்
கடலை வறுத்தான்

வாக்குக் கொடுத்தான்
சைக்கிளை விற்றான்

சுண்டல் வாங்கினான்
பல்லுக்குத்தி அழுக்கெடுத்தான்

ஜோஸ்யம் பார்த்தான்
ஜாதி சரியில்லை என்றான்

கடன்காரனுக்கு சாபம் கொடுத்தான்
அப்பனை மிரட்டினான்

வாளி வாளியாய்க் குடித்தான்
வாந்தி வாந்தியாய் எடுத்தான்

ஹாண்டா வேணும் என்றான்
ரொக்கம் வாங்கிக் குவித்தான்

கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
 ___________________________________________
கதிர் காத்திருப்பது இங்கே..
___________________________________________

Tuesday, June 22, 2010

தொட்டாச்சிணுங்கி..

சிணுங்குமெனத் தெரிந்திராத 
சீண்டலிலில்லை நஞ்சம்
மலருமெனத் தொடரும் 
மழலைத் தீண்டலுக்கும்
தெரிவதில்லை மூலம் 

நிலத்திற் புரளும் சிறு
நாலுமணிப் பூவிடம்
தலை சாய்த்து 
நலம் கேட்கும்
நந்தியாவட்டையின் 
நிட்களங்கம் 
அறிவீரா..  

ஏறி நின்று
கீறி விடுதலல்ல 
செறி நட்பு
சிணுங்கியது 
மலரும்வரை 
புலனடக்கிப் 
புலர்ந்திருப்பது
நட்பூ... 

_______________________________

Friday, June 18, 2010

இலக்கண மீறல்கள்...

இறந்தகாலப் பெயரடை

கருமை நிறமும்
கூரிய அறிவும்
காக்கையின் அடையாளம்

இறந்தகால வினை முற்று

கற்பித்தது...
ஒற்றுமையின் இலக்கணம்


செய்வினை | செயற்பாட்டு வினை

எடுப்பார் கைப்பிள்ளை
எதிரிக்கும் ஒற்றராகும்
ஏதிலியாகிக் குற்றுயிராகும்

நிகழ்கால வினையெச்சம்

காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்

கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள்

எதிர்கால ஏவல்வினை

கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்
___________________________________

Monday, June 14, 2010

விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து... தலைப்புச் செய்திகள்..

சமாதானம் 

வேலைப்பளு அதிகம்... வார இறுதியிலும் ஏதேதோ நிகழ்வுகள். நான் அவ்வப்போது படிக்கும் சில இடுகைகளைக் கூடப் படிக்க முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வார்களென்று எனக்குத் தெரியும், ஆனாலும் மன்னிக்க வேண்டுகிறேன். (செயல் முக்கியம் அமைச்சரே)

விளம்பரம் / அறிக்கை 

நேற்று இஸ்லாமியக் காங்கிரஸ் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். காலையிலிருந்து மாலை வரை நேரம் போனதே தெரியவில்லை. மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். அதிற் கலந்து கொண்ட இஸ்லாமிய நண்பர்கள் "இஸ்லாம்" என்ற மார்க்கத்தில் பிரச்சனை இல்லை. பெரும்பாலும், நாடு மற்றும் அவரவர் சமுதாயம் சார்ந்தே பிரச்சனைகள் தோன்றுகின்றன. எங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். சிலபல உவப்பில்லாத விடயங்களையும், மனிதர்களையும் வைத்து அனைத்து இஸ்லாமியர்களையும் எடை போடாதீர்கள். எதுவானாலும், கேளுங்கள், பேசுங்கள், விவாதியுங்கள், திறந்த மனதுடன் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, தீர்வின் பகுதியாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொன்னது மனதைத் தொட்டது. 


சுவிற்சர்லாந்தில் மசூதிக் கோபுரங்கள் கட்டுவதற்கு எதிராக ஒரு வாக்கெடுப்பு நடாத்தி, கோபுரங்கள் எழுப்புவதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அவ்வப்போது இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் மதம் துறந்த மற்றவர்களின் மனிதத்தையும் மெச்சுவதற்கு வார்த்தைகளில்லை. இவ்வாறான ஒன்று கூடல்களில் பங்கேற்பவர்கள், பாதிரியார்களாகவும், கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தாலும், எம்மதமும் சம்மதமே, மனிதமே முக்கியமென்ற கொள்கையுடையவர்களாக இருப்பது குறிப்பிடத் தக்கது. 

பேராசிரியர் Dr. Andreas Kley பேசும்போது, சுவிற்சர்லாந்தில் மசூதி கட்டுவது பற்றிய சர்ச்சையில், "சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரு தேவாலயத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? போன்ற கேள்விகள் முன் வைக்கப் படுவதாகவும், அது அவரவர் நாட்டின் எண்ணக் கருத்துகள், பார்வைகளில் சார்ந்திருக்கிறதென்றும், நம்மைப் பொறுத்த வரையில் நம் நாட்டிலிருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் நம் கடமை" என்றும் விளம்பியதில் மனிதம் பிரகாசித்தது.



பங்கேற்றவர்கள் அனைவரும் அவரவர் தனித்தன்மையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, எனினும், என்னை மிக மிகக் கவர்ந்தவர்களில் கிறிஸ்தவப் பெண் துறவி Ingrid Grave மிக முக்கியமானவர். கிறிஸ்தவப் பெண் துறவியாக இருந்த போதிலும், கிறிஸ்தவ மதத்திலுள்ள குறைபாடுகளை அவர் எடுத்துக்காட்டிய விதமும், சில உடைகளின் தோற்றத்திற்கான காரணங்களும், அது இப்பொழுது எவ்வாறு நடைமுறைச் சாத்தியமற்றிருக்கின்றதெனவும் கூறியது "வாவ்" சொல்ல வைத்தது. பெண் துறவிக்கான அந்த உடையில் சாதாரண மனிதர்களுடன் இயல்பாக நெருங்கிப் பேசுவது சிரமமாக இருக்கிறதென்றும், அதற்காக அவசியமில்லாத வேளைகளில் சாதாரண உடையுடனே வலம்வருகிறேன் எனவும், பல மனிதர்களின் மனத்தை நெருங்கியிருக்கிறேன் எனவும் அவர் சொன்ன போது அவரை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் போலெழுந்த உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நல்ல வேளையாக நாங்கள் பங்கெடுத்த வொர்க்‌ஷாப்பில் அவர்களும் இருந்ததாலும், திரும்பி வரும்போது ரயில் பயணத்தில் பேச வாய்ப்புக் கிடைத்ததாலும் முடிந்த அளவு கையைப் பற்றிக் கொண்டு சிலாகிக்க முடிந்தது. 


இன்னும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசைதான், ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயங்கள் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி. 


சூனியம் 

கவுஜையிலிருந்து தப்பித்தோமென்று சொல்லிச் சீண்டிச் சீண்டிச் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் நண்பர்களுக்காக... எப்பவோ கிறுக்கிய கவிதையின் ஒரு பகுதியை... இங்கே சமர்ப்பிக்கிறேன்.. 

இதயக்குகையின் 
உள்வெளிச்சுவர் தெறித்து 
விழுந்த இடர்ப்பந்து 
அழுந்திய தொண்டைக்குழி 
விழுங்க விழுங்க 
உருண்டெழுந்து 
கருவிழி பின் சென்று 
மீளும் கோளம்
இடறியிடறி 
அடிவயிறு வரை 
சென்று மீண்டும் 
இதய அண்மையில் 
வெடித்துப் பரவும் 
வலி...

கண்டனம்

ராஜசேகர் ரேஞ்சுக்கு "நீங்க திருந்தவே மாட்டீங்கடா".. "நாசமாப் போங்கடா".. "நீ லூசு, உங்கப்பன் லூசு, உன் தாத்தன் லூசு" என்ற தொனியில் எங்களைக் கண்டபடி திட்டி, இப்போதைக்கு எழுதுவதை நிறுத்தியிருப்பதாக அறிவித்த (அல்லது சஞ்சய் அங்கிள் பாணியில் லீவு லெட்டர் கொடுத்த) அதுசரிக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். 

அஞ்சலி

திவாகர் அண்ணாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். பிரபா அண்ணாவுக்கு - நாமல்லாம் இருக்கோம்ணா. 

____________________________________________________________________________________
வாசித்தது - லக்கலக்கலக்க... 

Wednesday, June 9, 2010

எது நடந்ததோ... அது...

வினவு விடுத்த அறிக்கை.. அதனைத் தொடர்ந்து நான் அவர்களுக்கு அனுப்பிய மடல்.. கீழே.. ________________________________________________________________________________________
||Author: வினவு
Comment:
அறிவிப்பு:

'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||

வணக்கம்..! காலம் கடந்ததெனினும்.. ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்ல எனக்கு இன்னும் சங்கடமாகவே இருக்கின்றது. இதை அழித்து விட்டதாலேயே... எல்லாம் சரியாகி விடுவதில்லை. ஆனாலும்.. போகட்டும்.. அந்த இடுகையில் என் பெயர் சொல்லி இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும்... (மனமிருந்தால் சம்மந்தமில்லாது குறிப்பிடப்பட்ட மற்ற நபர்களின் பெயர்களையும் கூட.. ) நீக்கி விடும்படி கோருகிறேன் (என்னுடைய பின்னூட்டம் உட்பட).

மேலும், ஏழரை என்னும் நபருக்கு ஏதோ ஒரு விதத்தில் என் நன்றியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளுணர்வியம்புவதிது.

மறைகிறேன்.. வினவுவில் இனித் தோன்றமாட்டேனென்ற நம்பிக்கையுடன்...!

____________________________________________________________________________
இந்தக் கோரிக்கையை ஏற்றுப் பின்னூட்டங்களையும் நீக்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம். 
இனிமேல் இப்படியான அனர்த்தங்கள் நிகழாதிருக்கட்டும்! 
____________________________________________________________________________
தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை... அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்... 
____________________________________________________________________________
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.. 
_____________________________________________________________________________
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்.. 
______________________________________________________________________________