”தலை வலிக்கும் வேதா... சுவர்ல தலைய முட்டாதம்மா... செல்லமே... வேதா இங்க பாரு.. அப்பா சொல்றது கேக்கல?... வேதா... வேணாம் வேதா... வேதா.. வேதா...”
சுவற்றில் சாய்ந்திருந்த வேதாவுக்கு ஆறு வயதாகி நாலு நாட்கள் முடிந்து விட்டிருந்தது... ஏதோ ஒரு பாட்டை வாய்க்குள் முணுமுணுத்தபடி... அதன் தாளத்திற்கு ஏற்றவாறு தலையைச் சுவற்றில் முட்டிக் கொண்டிருந்தாள்... கண்கள் யன்னலை வெறித்துக் கொண்டிருந்தன...
அவளின் அப்பா ஜானகிராமன் கெஞ்சி... அதட்டி.. செல்லம் கொஞ்சிக் கூப்பிட்ட எந்த வேதாவும் அவள் காதுக்கு எட்டவில்லை... அல்லது காதை எட்டியது... மூளைக்கு எட்டவில்லை...
ஜானகிராமனுக்கு அதொன்றும் புதிதாக இல்லை... எப்படியாவது அன்பையும், ஆதங்கத்தையும் குழைத்த அந்தக் குரல் வேதாவின் காதுகளுக்குள் புகுந்து அவளை எட்டிவிடும் என்று தெரியும்... ஆரம்பத்தில் திரும்பியே பார்க்காதவள்.. இப்பொழுதெல்லாம் இருபது தடவை கூப்பிட்டால் ஒரு தடவை திரும்பிப் பார்த்து விடுகிறாள்...
சைக்கிள் வாங்கிவிட்ட மனசு காருக்கு ஆசைப்படுவது போல்... திரும்பிப் பார்த்துட்டா... ஒரு தடவை சிரித்தால் தேவலாம் என்று இதயம் ஏங்கிப் போகையிலேயே... அவள் தலை திரும்பி விடுகிறது... மிக மிக அருமையாகச் சிரிக்கக் கூடச் செய்கிறாள்... மிக மிக வசீகரமாக...
”... வேதா... எவ்ளோ நேரம் கூப்டறேன்... அடி போடனும்... ஏய்... வேதா... டேய்... வேதா...”
ஜானகியின் ஏறி, இறங்கிக், குழைந்த குரலிலிருந்த அதே தீவிரம் அவன் மனைவி ரீனாவின் கண்களிலிருந்தது... ’பார்த்துடு வேதா’... என்று மனம் அலறியது... கண்ணின் கடைகளில் இதோ வந்துடுவேன் என்று கண்ணீர் மிரட்டிக் கொண்டிருந்தது...
அறையின் மூலையில் போடப் பட்டிருந்த மேசையில் சற்று நேரம் முன்னர் வரைக்கும் ஜானகியும்... ரீனாவும் சொன்னதைக் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த pedagogue மற்றும் தெரபிஸ்ட் மாயா நீல் எழுதுவதை நிறுத்தி விட்டு.. மூவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்... கண்களில் தளும்பிய நீரை அவர்கள் அறியாது காகிதக் கைக்குட்டை வைத்து அழுத்தி ஒற்றிக் கொண்டிருந்தாள்...
ஜானகிக்குத் திடீரென்று மாயா இருந்தது கவனம் வந்தது... சங்கடத்துடன் திரும்பி... ”ஸாரி மிஸ் நீல்... இப்போல்லாம் கூப்ட்டா திரும்பிப் பார்ப்பா... இன்னைக்கு ஏதோ மூட் சரியில்ல அவளுக்கு”... சொன்னபடியே திரும்பி... ”வேதாக்குட்டி... வேதா”... என்று ஆரம்பித்தான்...
”நைட் சரியா தூங்கல அவ”... ஜானகி விட்டதிலிருந்து ரீனா தொடர்ந்தாள்..
மாயாவுக்குப் புரிந்தது... மூழ்கிக் கொண்டிருப்பவன் துரும்பையும் பற்றுவான்... அவர்களின் நம்பிக்கை ஒளி அது... ஆறு வயதுக் குழந்தை அறுபது தடவை கூப்பிட்டு ஒரு தடவை திரும்பிப் பார்க்கிறாள் என்பதில் உண்டாகும் ஆனந்தக் கண்ணீர் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்...
அறுபது மில்லியன் டாலர் பெறுமதியான தொலைந்து போன சரக்குத் திரும்பிக் கிடைத்து விட்டாலும்... இந்தச் சந்தோஷத்தை யாரும் அனுபவித்திருக்க முடியாதென்றே தோன்றுகிறது... எது சந்தோஷம்... எது துக்கம்... இதை எப்படி அளவிடுவது... ஒவ்வொருவரின் சந்தோஷமும், துக்கமும் தனித் தனி மனிதர்களுக்கிடையில் எந்த அளவுக்கு வேறுபடுகிறது... மடு... மலை.. வித்தியாசம் எல்லாம் ஒன்றுமே இல்லை...
”பார்க்கிறா பாருங்க... பார்க்கிறா... மிஸ் நீல்... ஸீ... திரும்பிப் பார்த்துட்டா”... ஜானகியின் உற்சாகமான குரல் மாயாவை அடைந்து அவள் வேதாவைத் திரும்பிப் பார்ப்பதற்குள்... வேதா திரும்பவும் யன்னலை வெறிக்க ஆரம்பித்திருந்தாள்....
ஜானகிக்கு ஏமாற்றம் ஒரு பக்கம்... இயலாமை ஒரு பக்கமாகத் திரும்பி... ”வேதா” என்று கூப்பிட்டு முடிப்பதற்குள்... வேதா சட்டெனத் திரும்பினாள்...
கார்முகிலில் மறைந்திருந்த வானவில் சட்டெனத் தோன்றியது போல்... ஜானகி, ரீனா தம்பதியினரின் அகமும் புறமும் ஒரு சேர மலர்ந்து முகம் பிரகாசமானது... இரண்டு பேரும் கண்ணைத் துடைத்துக் கொண்டு மாயாவைப் பார்த்தார்கள்.... மாயாவிற்கும் அவர்களின் சந்தோஷம் தொற்றிக் கொள்ள... முகம் முழுக்க மகிழ்ச்சியுடன்... வேதாவைப் பார்த்து... ”ஹாய் வேதா”... என்று கையாட்டிப் புன்னகைத்தாள்...
வேதா எழுந்து போய்... டி.வி.யின் பொத்தானை அழுத்தினாள்... டி.வி. ஸ்டாண்டின் மேல் கால் வைத்து எம்பி டி.வி.யில் பிடித்துப் பக்கத்திலிருந்த கப்போர்ட்டின் மேல் நடப்பது போல் சர்வ சாதாரணமாகத் தொற்றினாள்...
”ஐய்யய்யோ... விழப்போற வேதா...” ஜானகி பதறினான்...
”அவளுக்குப் பயமே இல்ல மிஸ் நீல்... இப்டித்தான் எங்க வேணா ஏறுவா.. இறங்குவா”... ரீனாவின் குரலில் பயத்தை மீறிய ஒரு பெருமை இருந்தது...
”ஆமாம்... சரிதான்..”.. மாயா தலையைப் பலமாக அசைத்தாள்... அவளுக்கு வேதாவைத் தெரியும்... ஜானகி, ரீனாவை விடச் சற்று அதிகமாகவே தெரியும் என்று சொன்னால் மிகையாகாது...
மூன்று வருடங்களுக்கு முன் மாயா வேலை செய்யும் பள்ளியின் தலைவர் வேதாவை அவளிடம் அறிமுகம் செய்தபோது சொன்ன ”ஆட்டிஸம்” என்ற வார்த்தையை அவளால் நம்ப முடியவில்லை...
இந்தக் குழந்தைக்கா “ஆட்டிஸம்”...?! அதன் முகத்தில் அறிவு ஜொலித்ததோ இல்லையோ... ஏதோ ஒரு அமைதியும்... தேஜஸும் தெரிந்தது... இப்படி ஒரு குறை இருக்கிறதென்று யாராவது சத்தியம் செய்திருந்தாலும் நம்புவது சிரமம்...
”ஹாய் வேதா.... நான் மாயா”... என்று நீட்டிய அவள் கரங்கள் நடுங்கியது... வேதா வெறித்து எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்...
லாவகமாக அந்தரத்தில் தொங்கிக் கப்போர்ட்டில் நடக்கும் வேதாவுக்கு... நிலத்தில் உட்கார, படுக்க வைக்க அவள் செய்த பிரயத்தனங்கள் எத்தனை... நிலத்தில் படுக்க வைத்து அழுத்திப் பிடித்து... நிலம் பாதுகாப்பானதென்று அவளுக்குப் புரிய வைக்க எத்தனை மாதங்கள் பிடித்தன...
இன்று சுவற்றில் சாய்ந்து தலையை அடித்துக் கொண்டிருக்கும் வேதாவுக்கு... சுவற்றை உணர வைக்க எத்தனை நாட்கள் எடுத்தன...
சாதாரணமான குழந்தைகளின் கையில் பென்சிலைக் கொடுத்து அதன் கையைப் பிடித்து ‘அ’ எழுதுவதை அநேகமாக எல்லாரும் செய்திருப்பார்கள்... ஓரிரு நாட்கள்... அதன் சிரமம் தெரிந்திருக்கும்...
மாயா வேதாவுடன் இன்னொரு வேதாவாகி.... அவளுடன் உடம்போடு உடம்பாக ஒட்டியபடியே... அவளின் கைக்குள் வேதாவின் கையை அடக்கி... பற்தூரிகை எடுத்து... பற்பசைக் குழாயின் மூடி திருகி... பற்பசை பிதுக்கி... வேதாவின் வாய்க்குள் நுழைப்பதிலிருந்து... தண்ணீர் பிடித்து முகம் கழுவுவது வரை...
சீப்புப் பிடித்துத் தலை சீவுவதிலிருந்து... கத்தி பிடித்துக் காரட் சீவுவது வரை...
சட்டை மாட்டி... செருப்பு மாட்டிக் கழற்றுவது வரை... நாள் முழுவதும்... வேதாவுக்குத் தேவையான அனைத்தையும் வேதாவின் கைகளை வைத்து வேதாவாகி அவளே செய்து கொண்டிருக்கிறாள்... மூன்று வருடங்களாக...
வேதாவின் ஒரு மில்லிமீட்டர் கண்ணசைவையும்... கையசைவையும் கண்டு பிடித்து... ’க்ரேட் இம்ப்ரூவ்மெண்ட்’ என்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறாள்...
அவளுக்குப் புரியும்... வேதாவின் ஒவ்வொரு அசைவையும் அவளைப் பெற்றவர்கள் எப்படி உணர்ந்து கொண்டிருப்பார்களென்று...
டி.வி.யில் ’சுட்டும் விழிச்சுடரே... சுட்டும் விழிச்சுடரே...’ பாட்டின் மெட்டுக்குக் கதாநாயகனும், நாயகியும் ஆடிக் கொண்டிருந்தார்கள்...
வேதா திரையின் மிக மிக அருகில் நின்றபடி... பாட்டின் வரிகளைக் ஹம் செய்து கொண்டிருந்தாள்... திடீரென்று பொத்தானை அழுத்தி டி.வி.யை நிறுத்தினாள்... பாடலை அச்சுப் பிசகாது ஹம் செய்தபடி பக்கத்திலிருந்த சோஃபாவில் தாவி உட்கார்ந்து... பின் தலையை தாளம் தப்பாது சோஃபாவில் அடிக்க ஆரம்பித்தாள்...
“கேக்குற எல்லாப் பாட்டும் சுருதி சுத்தமா ஹம் பண்ணுவா..”.. ரீனாவின் முகத்தில் வாட்ஸ் கணக்கில் ஒளியிருந்தது...
மாயா... ஆமோதிப்பாய்க் கண்களை மலர்த்தினாள்... “ஆமாம்... வேதாக்கு பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்... ரொம்ப டாலண்ட்டட்..” என்றாள் பெருமையாக.. அவளின் மூக்குச் சிவந்திருந்தது... குனிந்து குறிப்பேட்டைப் பார்த்தாள்... ”பசிச்சா என்ன செய்வா..?”
”நேரா கிச்சனுக்கு வருவா... என்னோட சட்டையப் பிடிச்சு இழுப்பா...” ரீனா சிரித்தாள்...
“வாவ்..” என்றாள் மாயா... “என் கிட்டயும் அதேதான்.. மூன்று மாசத்துக்கு முன்னாடி.. இப்டி செய்யத் தெரியாது அவளுக்கு... இது எவ்ளோ பெரிய முன்னேற்றம் தெரியுமா..?.. ம்ம்... என்ன எல்லாம் விரும்பிச் சாப்டுவா... தானே கைல எடுத்துப்பாளா... நீங்க ஹெல்ப் பண்ணனுமா..?”...
வேதா... ’லாலாலா லல்லல்லா’... என்ற தொனியில் குரலை உயர்த்தினாள்...
மூன்று பேரும் பேசுவதை நிறுத்தி.. அவளிடம் திரும்பினார்கள்..
வேதா.. கழுத்தை ஒரு பக்கம் லேசாகச் சரித்து... இமைகளைச் சுருக்கி... அறையின் மேல் மூலையை வெறித்தாள்.. பார்வையை அகற்றாது... ஒரு புள்ளியிற் பொருத்திச் சுருதி கூட்டி... பின் தலையை சோஃபாவில் பலமாக அடித்து முன்னும் பின்னுமாக அசைந்து ஊஞ்சல் போல் ஆடினாள்...
ஜானகி அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து அதில் தலையைப் பலமாக மோதினான்...
வேதாவைக் கவனித்துக் கொண்டிருந்த ரீனாவும்... மாயாவும்.. திடுக்கிட்டு அவனிடம் பாய்ந்தார்கள்...
“ஐய்யோ என்னங்க இது.. நிறுத்துங்க..” ரீனா திகைத்துப் போய், கதறி, விம்மி, வெடித்தாள்...
மாயா ஜானகியை நெருங்கி அவன் தோளில் ஆதரவாகக் கை வைத்து அழுத்தி.. “மிஸ்டர் ஜானகிராமன்.. காம் டவுன்..” என்று ஆசுவாசப் படுத்தினாள்...
ஜானகியின் தோள்கள் தளர்ந்தன... தலையை சுவற்றுடன் அழுத்தியபடி வேதா வெறித்திருந்த மூலையை வெறித்தான்... அந்தப் புள்ளியைத் தேடினான்...
”எனக்குப் பார்க்கணும் மிஸ் நீல்... அவ உலகம் என்னன்னு பார்க்கணும்... அது எப்டி இருக்கும்னு பார்க்கணும்... அவ எங்க உலகம் பார்க்கலன்னா... பார்க்க முடியலன்னா போகட்டும்... நாம அவ உலகத்தையாவது பார்க்கலாமா மிஸ் நீல்..” .. சுவற்றுடன் இறுகியபடி, குலுங்கினான்...
மாயாவின் கண்களிலிருந்த கண்ணீர் மடைதிறந்து கொட்டிக் கொண்டிருந்தது...