header photo

Monday, September 28, 2009

சுப்பு vs. லக்ஷு... செகண்ட் டே..

ஃபர்ஸ்ட் டே பார்க்காதவங்க இங்கே க்ளிக்கவும்..

ஊர்ல வாலிபால் ஆடுற வாலிபப் பசங்க கூட போய் போட்டிக்கு மல்லுக்கட்டிட்டு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு வீட்டுக்கு வருவாருங்க நம்ம சுப்பு. லக்ஷு ஒரு மூலைல சுருண்டுக்கிட்டு இவாவே இடுப்பை புடிச்சிக்கிட்டு, இவாக்கு இடுப்பு புடிக்குதுன்னு முனகிட்டிருப்பா பாருங்க.. ரொம்ப தமாஷா இருக்குமுங்க.

சுப்பு மிகவும் மென்மையான குரல்ல "நான் வாலிபால் ஆடிட்டு வந்தா உனக்கு தவறாம இடுப்பு பிடிச்சுக்குமே புள்ள".. ன்னு சொல்லிக்கிட்டே, சமையல்கட்டில நுழைஞ்சு இவருக்கும், லக்ஷுக்கும் சேர்த்து மிளகு ரசம் ரெடி பண்ணுவாருங்க.

லக்ஷு கொஞ்சம் தலைய நிமிர்த்தி, "தெரியுதில்ல.. அப்புறம் எதுக்கு பந்தாட்டம் இந்த வயசில"ன்னு நொடிச்சிக்கிட்டு.. திரும்ப சுருண்டுக்குவாங்க. சுப்பு ரொம்ப நிதானமா மிளக தட்டி... புளிய கரைச்சிட்டிருப்பாருங்க அடுப்பங்கரைல.

சுப்பு வீட்ல இருக்கிற சமயத்தில முக்கால்வாசி நேரம் பஞ்சாங்கம் கூடவே இருப்பாருங்க. என்ன பண்றது, அந்தாளு அஜெண்டா அதுதான். எப்போ நெல்லு விதைக்கணும், எப்போ நாத்து நடணும், எப்போ அறுவடை பண்ணனும் எல்லாம் அந்த அஜெண்டா பார்த்துத்தான் முடிவு பண்ணுவாரு.

அக்கம் பக்கத்தில உள்ளவங்க ஒரு நாள்ல பத்து வாட்டி வந்து 'பல்லி மேற்கால சொல்லிச்சு', 'கிழக்கால சொல்லிச்சு', கிழக்குமில்ல, வடக்குமில்ல, வடகிழக்குமில்ல ஒரு மாதிரியான கோணத்தில சொல்லிச்சு.. என்னன்னு பார்த்து சொல்லுன்னா.. கவனமா பஞ்சாங்கத்த பார்த்து பல்லி சொன்ன மற்றும் விழுந்த பலன் சொல்றது இந்தாளோட பொழுது போக்கு. சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி.

பாத்திரம் அறிஞ்சு பணம் கடன் கொடுக்கிறதில சுப்பு கில்லாடிங்க. லக்ஷு கொஞ்சம் விட்டேத்தியாதான் இருப்பா இதிலயும். சுப்பு பஞ்சாங்கத்த குடைஞ்சுக்கிட்டு இருக்கிறப்போ யாராவது வந்து தலைய சொறிஞ்சுக்கிட்டு, ஐஞ்சு, பத்துன்னு கடன் கேட்டா, பாத்திரம் சரியா இருந்தா "புள்ள"ன்னு கூப்டறதுகுள்ள, லக்ஷு பணத்த நீட்டிக்கிட்டு ரெடியா நிப்பாங்க.

பாத்திரம் சரியா இல்லைன்னா, பஞ்சாங்கத்தில ரொம்ப ஆழ்ந்து போய் "சிவன் ஆணை, என் கிட்ட ஐஞ்சு பைசா கூட இல்லை" அப்டின்னு சத்தியம் பண்ணுமுங்க. லக்ஷு வாய்க்குள்ள முணுமுணுன்னு திட்டி நொடிச்சுக்கிட்டு, வந்தவங்களுக்கு டீ, காப்பியாவது கொடுக்கலாம்னு சமையல்கட்டுக்கு போவா.

கடன் கேக்க வந்த ஆளு "இந்தாளு கிட்ட ஒரு பைசா பெயராது"ன்னு கிளம்பி போய் கேட் தாண்டுறதுக்குள்ள, ஆஹா சுப்பு உன்னை புடிச்சிட்டேன்ல கையும் களவுமான்னு, நான் குஷியா ஓடிப் போய் "ஏன் அப்பப்பா, இப்போ பொய்தானே சொன்னா?"ன்னு கேட்டா.. ஹெஹெஹெ..ன்னு நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு, "நான் என்ன பொய் சொன்னேன்? என் கிட்ட பணம் இல்லைனுதான் சொன்னேன், பணம் பூஜா ரூம்ல அலமாரில இல்ல இருக்கு.. என்ன புள்ள நான் சொல்றது பொய்யா"ன்னு லக்ஷுவ சாட்சிக்கு கூப்டுவாருங்க.

லக்ஷு உர்ர்ர்ர்-ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு, "ஆமாமா"ன்னு நொடிக்கிறது, பெருமையாவா இல்ல கடுப்பாலயான்னு இப்போ கூட எனக்கு தெரியாதுங்க.

தமாஷ் தொடரும்...

....

Sunday, September 27, 2009

சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எழுந்திரிச்சு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, மாஸ் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..

சுப்புலக்ஷ்மி
_____/\_____