ஏழு வருடங்கள் முன் என் தலை மேல் கன்னம் பதித்து விம்மிய என் தாத்தன் இன்றில்லை. தேங்காய்ப்பூவுடன் மசித்த கீரைக்கு நான் ஏங்கிக் கொண்டிருந்த போது "அம்மன் கேரட்டும் லீக்ஸும் கூட்டு செய்தேன், உனக்கு இங்க உள்ள மரக்கறி எல்லாம் சரிப்பட்டு வருமோ தெரியாது" என்றபடி சோறு பிசைந்து ஊட்டிய என் அன்னையும் இல்லை. இவற்றில் எவற்றுக்கும் வழியற்று அவசரமாக நீங்கி விட்ட அப்பாவும், பாட்டியும் இல்லை.
கதிர் இலங்கை செல்கிறேன் என்றபோது எனக்குப் பேச்சு வரவில்லை. அங்கே யார் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கக் கூடப் பிடிக்காது மனம் அழுத்தியது. நேற்று கதிரின் இடுகையைப் படித்தபோது, ஏழு வருடங்கள் முன் யாழ்ப்பாணத்தின் விமானதளத்தை அடையும் வரை, உட்கார்ந்திருந்த வாகனம் பின்னோக்கி விரட்டிக் கொண்டிருந்த தென்னை மரங்களும், பூவரசும், ஏரிகளும், நாரைகளும், உப்புக் காற்றும் சேர்ந்து கண்ணுக்குள் இடை விடாது கரித்துக் கொண்டேயிருந்தது.
பார்த்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு சிரிப்பானை விட்டு வந்தேன். ஏழு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், டெம்ப்ளேட் கூட இல்லை, ஒரு சிரிப்பான் மட்டுமா என்ற கேள்வியுடன் கதிர் வந்த போது, மீண்டும் கரித்தது.
படித்து முடிக்க முடியவில்லை, பிறகு சொல்கிறேன் என்று விட்டுப் பேசாதிருந்தேன். "நானெல்லாம் அங்கே சென்று என்ன கிழித்து விட்டேன், இப்படி ஒரு இடுகை, அதற்கு நாலு பின்னூட்டம்.. ஒரு சக மனிதனா என்ன செய்ய முடிந்தது..".. என்று அங்கலாய்த்தார். "உணர்விருக்கே... அது போதும்" என்றேன்.
இன்று புதுவை சிவா என்ற பதிவர் என்னுடைய சிரிப்பானைக் குறிப்பிட்டு, அலட்சியப் புன்னகையென்று அடிக்கோடிட்டிருந்தார்.
உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துவதற்கு அவசியம் ஏதுமில்லை. அரசியல், ஆராய்ச்சி எல்லாம் தாண்டி சீமான், தாமரை போன்றவர்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் அளித்த ஆறுதலை யாரும் எப்பவும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
வேறு நாட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் இருந்தும், அடிபட்ட புறாக்களாகத் துடித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து விட வேண்டுமென்று ஓடிச் சென்ற அந்த உணர்வுக்கு வந்தனம்.
_______________________________________