header photo

Saturday, March 13, 2010

உலகை நீங்கும் போதெல்லாம்....



தேடித் தேடி அடையும் இப்போதைய தனிமை அப்பொழுது எனக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. அம்மா ஒரு குட்டிப் பாப்பாவையாவது பெற்றிருக்கக் கூடாதா, ஒரு பூனைக்குட்டியாவது வளர்க்கக் கூடாதா என்று ஏங்கிப் போயிருந்த வயது அது.

கையில் ஒரு மரப் பொம்மையையோ, மட்டையையோ வைத்துக்கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் என்னையும் பார்த்திருக்கிறீர்கள். திடீரென்று மிக மிக அருகில் கேட்கும் அம்மாவின் குரலில் உடல் ஒரு தடவை துள்ளி, இவ்வுலகிற்கு மீண்டு, கண் பிதுங்கி, வாய் பிளந்து நின்று, உலகத்தில் செய்யக் கூடாத அசட்டுத்தனம் செய்து விட்டதாக நினைத்து, நாள் முழுதும் வெட்கப்படும் அந்த 'அசட்டுத்தனம்' கூட அனுபவித்திருக்கலாம். கார்ட்டூன் குழந்தைகளுக்கு இந்த அனுபவம் நேராதிருந்திருக்கலாம்.

இப்பொழுதெல்லாம் என்னுடன் நான் வாய்விட்டுப் பேசச் சந்தர்ப்பம் கிடைப்பதே இல்லை. அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நினைவுகளை மீட்பதிலும், மையமற்ற ஏதோ எண்ணங்களில் சுழல்வதிலுமாக என் இருப்பு மறந்து, மறைந்து விடுகிறது.

தெற்கிலும், மேற்கிலும் வீட்டை உரசிக் கொண்டு வீடுகள் இருந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும் பரந்து விரிந்திருந்த பசேலென்ற புல்வெளியும், சில மரங்களும் மைல்க் கணக்கில் நீண்டிருக்கும் பாலைவனம்போல் தோன்றி, அது மட்டுமே நிதர்சனம் என்று பூதாகரமாகத் தோன்றியிருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதிலும் சின்னஞ்சிறிய வெண்மையான மூக்குத்திப் பூக்கள் என் கண்ணுக்குப் புலப்படவே இல்லை. ஆனால் சிறகை நிதானமாக அசைத்தவண்ணம் அதை முத்தமிட்டுக் கொண்டிருந்த பட்டாம்பூச்சியைப் பிடித்து மீண்டும் பறக்க விடுவதில் அது அதன் வண்ணத்தைக் கொஞ்சம் என் விரல் நுனிகளில் விதைத்து விட்டுப் போனதென்னவோ உண்மைதான். அம்மா 'இன்னொரு' பட்டாம்பூச்சியாவது பெற்றிருக்கலாம் என்று நினைத்திருந்திருப்பேனோ?!

பாம்பின் மேல் பயமிருந்தாலும் ஏதோ ஒரு கணத்தில் அதன்பால் எனக்குப் பரிவோ, பிரியமோ கண்டிப்பாக ஏற்பட்டிருக்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் அலுத்துவிட்டிருந்த நாளொன்றில் கைக்கு அகப்படாது விர்ர் விர்ர்ரென்று பறக்கும் தும்பிகளைப் பிடிப்பதில் மும்முரமாகி விட்டிருந்தேன். திடீரென்று பாலைவனத்தில் பாலாறு ஓடுவது போன்ற ஒரு கலவரம். திரும்பிப் பார்த்தால் வீட்டின் முன் பத்துப் பதினைந்து பேர், பலபாலர், விதம் விதமான வயதுகளில் கிளித்தட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

என் கண்களை என்னால் நம்பத்தான் முடியவில்லை. கால்கள் தன்பாட்டுக்கு என்னை அந்தக் கூட்டத்தில் சேர்த்து விட்டிருந்தது. இறந்து சொர்க்கம் எய்துபவர்களுக்கு எப்படியோ தேவலோக மொழி புரிந்து விடுகிற மாதிரி, எனக்கும் அவர்கள் மொழி புரிய ஆரம்பித்தது. "தலையில அடியாத", "தலையில அடியாத", "தலையில அடிக்கக் கூடாது", "பாவம்"..  அப்பொழுதுதான் கவனித்தேன் எல்லாருடைய பார்வையும் சில அடிகள் தாண்டி புற்தரையில் இருந்தது. அங்கே ஒரு கருநாகம் நெளிந்து கொண்டிருந்தது. ஒரு விடலைப் பையன் கையில் தடி ஒன்று, நிலத்தில் விழுந்து விழுந்து அடி வாங்கியோ என்னமோ வீங்கிப் போயிருந்தது. கூடியிருந்த கூட்டம் தலை வேண்டாம், தலை வேண்டாம் என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும், அவன் பாம்பின் தலைக்கே குறி வைத்து தடியை அடித்துக் கொண்டிருந்தான்.

எனக்குத் திருவிழாவில் இருப்பது போன்ற குஷி ஏற்பட்டு விட்டிருந்தது. இந்தக் கிளித்தட்டு எவ்வளவு நேரம் நீடிக்கும், அந்தப் பாம்பு எவ்வளவு நேரம் சமாளிக்கும் என்று கவலையாக இருந்தது. அம்மா பாம்பின் மேல் கண் வைத்தபடியே, "எண்ட முருகா, என்ன இது சோதினை, அப்படியே அச்சு அடிச்ச மாதிரி, அச்சு அசல் வள்ளியம்மை வாசல்ல இருக்கிற மாதிரியே.. வால் கொஞ்சம் நீட்டிச் சுருட்டி தலையை லேசா நிமித்தின மாதிரி சுருள் மேல கிடத்தி, சாந்தமா அப்ப்பிடியே பார்த்துக் கொண்டு.. பாந்தமா படுத்துக் கிடக்கு".. என்று பதைபதைத்த குரலில் அவளுக்கு முதன் முதலில் தரிசனம் கொடுத்த பாம்பின்புகழ் பாடிக் கொண்டிருந்தாள். முருகன் கோயிலில் சிலையாக இருக்கும் பாம்பின் அவதாரத்தை அடிப்பது பாவமில்லையா என்று எனக்கு யோசனை ஓடியது. முருகன் கோயிலில் வள்ளியம்மை வாசல் எங்கிருக்கிறது, அங்கே எங்கே பாம்பிருக்கிறது, அடுத்த தடவை தாத்தாவுடன் போகும்போது பார்க்க வேண்டும் என்று நினைத்ததுதான், அப்புறம் பார்த்த ஞாபகம் இல்லை.

பின்னொரு நாள் பாட்டிவீட்டு வாசலில் உட்கார்ந்து ஒரு கால் மடித்து, ஒரு கால் கீழ்ப் படியில் நீட்டி, கன்னத்தில் கை தாங்கி, கண்ணைத் திறந்தபடியே தூங்கி, என்னுடைய உலகத்தில் விழித்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தேன். என்றைக்குமில்லாது டைகர் தொண்டை வறண்டு போற அளவுக்கு மிரட்சியாகக் குரைத்துக் கொண்டிருந்த சத்தம் என்னுடைய உலகத்தை அடைய சில நிமிடங்கள் ஆயிற்று. மெதுவாக இவ்வுலகிற்கு மீண்டு, டைகரின் மொழியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கையில்தான் பார்த்தேன், எனக்கு மிக மிக அருகில் என்னை மறித்தாற்போல் டைகர் தனியாகக் கிளித்தட்டு ஆடிக் கொண்டிருந்தது.

நிதானமாகப் பார்வையை நகர்த்தினால், மிக மிக அருகில் கொழுகொழு என்று மிக நீளமாக ஒரு சாரைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. நீட்டிய காலை மடக்கவும் மறந்து உறைந்து, நெஞ்சுக்குழிக்குள் காணாமற் போய்விட்ட என் குரலைத் தோண்டியெடுத்து அலறியதில்.. தாத்தா, பாட்டி எல்லாம் திருவிளையாடற் கடவுள்கள் போன்று சட்டெனத் தோன்றி விட்டிருந்தார்கள். தாத்தா ஒரு குச்சியை வைத்து நிலத்தில் தட்டியதில், சாரை தனக்கான வழியைக் கண்டுபிடித்துச் சென்று விட்டிருந்தது. விஷப்பாம்பில் ஏற்பட்ட பரிவு, விஷமற்ற இந்தப் பாம்பினால் தொலைந்து, பாம்பின் மேல் மிகப்பெரிய வெறுப்பும், அளவில்லா அருவெறுப்பும் தோன்றியிருந்தது.

அது சாரைடா, கடிக்காது, விஷமில்லை போன்ற ஆறுதல் மொழிகள் எனக்கு வெகு தொலைவில் கேட்டன. டைகர் ஆதரவாக வந்து பக்கத்தில் அமர்ந்து, அடிக்கடி காதை விடைத்து, முகவாயை நிமிர்த்தி, நிமிர்த்தி, கண்களில் ஒரு விதமா "என்னடா", "என்னடா" என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மல்லிகைப் பந்தலடி மணலின் மேல் சாரை அரைந்த சுவட்டில் சகாரா தெரிந்தது. அதில் சாரையுடன் கிளித்தட்டாடி, மல்லுக்கட்டி, என்னை நெருங்க விடாது செய்த அந்தச் சின்னஞ்சிறிய டைகரின் நட்பு மணலோவியமாய்த் தீட்டப் பட்டிருந்தது. அந்த ஓவியம் ஆயிரம் கதைகள் கூறிக் கொண்டிருந்தது. கோமாவில் இருப்பவள் விஷயங்களைக் கிரகித்து மீட்பது போல், எனக்குள் நூற்றுக் கணக்கான வயலின்கள் தோள்மேலிருக்கும் ஒற்றை நரம்பினை மட்டுமிசைத்து , மிகப் பெரிய அதிர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தன.

இவ்வாறாக, இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கும் போதெல்லாம் இவ்வாறான காவியங்கள் கிடைக்கப்பெறும் பாக்கியம் பெற்றவளாகிறேன். 

(படம்: நன்றி கூகிள்)
__________________________________________________________________________________

35 ஊக்கம்::

Cable சங்கர் said...

நான் முதலான்னு தெரிஞ்சிக்கனும்... படிச்சிட்டு விமர்சனம் பிறகு...

பிரபாகர்.

பிரபாகர் said...

இந்த மாதிரி காவியங்களை நிறைய கொடுங்க சகோதரி... பாம்புகிட்ட கிடைச்ச அனுபவம்தான் என்னோட அடுத்த இடுகை....

பிரபாகர்.

Unknown said...

அருமை..

//கையில் ஒரு மரப் பொம்மையையோ, மட்டையையோ வைத்துக்கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் என்னையும் பார்த்திருக்கிறீர்கள். திடீரென்று மிக மிக அருகில் கேட்கும் அம்மாவின் குரலில் உடல் ஒரு தடவை துள்ளி, இவ்வுலகிற்கு மீண்டு, கண் பிதுங்கி, வாய் பிளந்து நின்று, உலகத்தில் செய்யக் கூடாத அசட்டுத்தனம் செய்து விட்டதாக நினைத்து, நாள் முழுதும் வெட்கப்படும் அந்த 'அசட்டுத்தனம்' கூட அனுபவித்திருக்கலாம்.//

இந்த வரிகளைப் படிக்கும்போது கையில் மரப்பாச்சியை வைத்துக்கொண்டு அதனுடன் பேசிக் கொண்டிருக்கும் நீல நிற கவுன் போட்ட அந்த பாப்பா கண் முன் வந்து
நிற்கிறாள்.

//நீளமாக ஒரு சாரைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. நீட்டிய காலை மடக்கவும் மறந்து உறைந்து, நெஞ்சுக்குழிக்குள் காணாமற் போய்விட்ட என் குரலைத் தோண்டியெடுத்து அலறியதில்.. தாத்தா, பாட்டி எல்லாம் திருவிளையாடற் கடவுள்கள் போன்று சட்டெனத் தோன்றி விட்டிருந்தார்கள். //

=))

Jerry Eshananda said...

நன்றிகளை பொதிந்து வைத்திருக்கும் பதிவு..

முனைவர் இரா.குணசீலன் said...

எல்லோர் மனதிலும் கேட்கும் குரல் தங்கள் வலைப்பதிவில் கேட்கிறதே!!

சைவகொத்துப்பரோட்டா said...

அனுபவத்தை எழுத்தில் கொண்டு வந்த பாணி நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

பாம்பானுபவங்கள்.....நாயின் நட்பு நன்று.

Chitra said...

அந்த ஓவியம் ஆயிரம் கதைகள் கூறிக் கொண்டிருந்தது. கோமாவில் இருப்பவள் விஷயங்களைக் கிரகித்து மீட்பது போல், எனக்குள் நூற்றுக் கணக்கான வயலின்கள் தோள்மேலிருக்கும் ஒற்றை நரம்பினை மட்டுமிசைத்து , மிகப் பெரிய அதிர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தன.

...............அழகிய வார்த்தைகளின் ஆட்சி.

Paleo God said...

டைகர் காவியம்..:)

vasu balaji said...

/இப்பொழுதெல்லாம் என்னுடன் நான் வாய்விட்டுப் பேசச் சந்தர்ப்பம் கிடைப்பதே இல்லை. அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நினைவுகளை மீட்பதிலும், மையமற்ற ஏதோ எண்ணங்களில் சுழல்வதிலுமாக என் இருப்பு மறந்து, மறைந்து விடுகிறது. /

ரொம்ப நேரம் நகரவிடாம செஞ்சது இது.

/டைகர் ஆதரவாக வந்து பக்கத்தில் அமர்ந்து, அடிக்கடி காதை விடைத்து, முகவாயை நிமிர்த்தி, நிமிர்த்தி, கண்களில் ஒரு விதமா "என்னடா", "என்னடா" என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது./

ம்ம்ம்ம்ம்ம்:((

/இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கும் போதெல்லாம் இவ்வாறான காவியங்கள் கிடைக்கப்பெறும் பாக்கியம் பெற்றவளாகிறேன். //

இரண்டுநாள் தொடர்ந்து சிரிச்சதாலயோ என்னமோ இது ரொம்ப கனமா மனசில இருக்கு. எனக்கு இந்த எழுத்து ஒரு காவியம்.

கவி அழகன் said...

supper supper

அன்பேசிவம் said...

அருமையா இருக்கு, ப்ரியா. அடிக்கடி இந்த மாதிரியான பக்க புரட்டல்கள் தேவைதான். :-)

Subankan said...

வார்த்தைகள் என்னவோ செய்கின்றன. அருமை

பா.ராஜாராம் said...

நல்ல நடை ப்ரியா.

நேசமித்ரன் said...

பால்யத்தின் வாசனையுடன் மிக நெருக்கமான உவமைகளுடன் மேகம் பிரிந்து பிரிந்து சேர்வது போல ஒரு நினைவலைவு... அழுத்தமான சப்டெக்ஷ்ட் ...!

சங்கர் said...

நானும் டைகர்னு ஒரு புலி, ஸாரி, நாய் வளர்த்தேன், அது என் தங்கச்சிய கடிச்ச பக்கத்து வீட்டு நாயை கடிச்சிடுச்சி (நெஜம், ஜனகராஜ் காமெடி இல்ல)

சிநேகிதன் அக்பர் said...

அருமையான எழுத்து உங்களது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//டைகர் ஆதரவாக வந்து பக்கத்தில் அமர்ந்து, அடிக்கடி காதை விடைத்து, முகவாயை நிமிர்த்தி, நிமிர்த்தி, கண்களில் ஒரு விதமா "என்னடா", "என்னடா" என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. //

காட்சி அமைத்துப் பார்த்தேன். சூப்பர் பிரியா. எனக்கு இந்தப் பதிவு ரொம்பப் பிடித்திருக்கிறது.

Sanjai Gandhi said...

வார்த்தைகள் எல்லாம் சும்மா விளையாடுது.. ஹ்ம்ம்.. என்னவோ ஆய்டிச்சி உங்களுக்கு..தீவிர இலக்கியவியாதி ஆகிட்டே வறிங்க.. கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும் உங்க கிட்ட.. பாம்புக் காவியம் எழுதற ஐடியா எதும் இருக்கா ஆத்தா?.

கலகலப்ரியா said...

நன்றி அண்ணா..

நன்றி முகிலன்...

நன்றி ஜெரி...

நன்றி சைவகொத்து...

நன்றி குணசீலன்...

நன்றி ஸ்ரீராம்..

நன்றி ஷங்கர்...

நன்றி சித்ரா..

நன்றி பாலா சார்...

நன்றி யாதவன்...

நன்றி முரளி...

நன்றி சுபாங்கன்...

நன்றி பா.ரா....

நன்றி நேசமித்ரன்...

நன்றி சங்கர்...

நன்றி அக்பர்...

நன்றி ஜெஸ்வந்தி...

நன்றி சஞ்சய்... இலக்கியவியாதி பத்தி சொல்றேன் அப்பு... வெயிட்...

மாதேவி said...

அழகிய நடை தொடர்ந்து ஆர்வமாகப் படிக்கவைத்தது.

கலகலப்ரியா said...

நன்றி மாதேவி...

archchana said...

நல்ல மொழிநடையில் நினைவுப் பகிர்வு.
நீங்க யாழ்ப்பாணத்தில் எந்த இடம்.
எங்களிடமும் டெவில் என்று (ராணி காமிக்ஸ் பாதிப்பு ) ஓர் நாய் இருந்தது. அது பாம்புகளை பிடித்தவுடன் நிலத்தில் அடிக்கும். இரண்டு மூன்று அடியுடன் பாம்பு சரி. அது நின்றால் நாங்கள் பாம்பை பற்றி பயப்பட தேவையில்லை. உங்கள் பதிவினூடு டெவில் வந்துபோனது.

கலகலப்ரியா said...

நன்றி அர்ச்சனா... உங்க ஈ-மெயில் ஐடி காணோம்... ம்ம்.. யாழ்ப்பாணம்தான் அர்ச்சனா... நீங்க எங்க.. ;)

புலவன் புலிகேசி said...

எனக்கும் ஒரு (நல்ல)பாம்புடன் அனுபவம் இருக்கு ப்ரியா...

மரா said...

அரமாலுமே நல்லா எழுதியிருக்கிறீங்கெ.
வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

//கையில் ஒரு மரப் பொம்மையையோ, மட்டையையோ வைத்துக்கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் என்னையும் பார்த்திருக்கிறீர்கள்.//

நானும் இதே தப்ப என் பையன்னுக்கு பண்ணிடனோன்னு, இப்ப எனக்கு ஒரு டவுட் வந்திருச்சு

பித்தனின் வாக்கு said...

நல்ல நினைவலைகள். நல்ல பதிவு. மிக்க நன்றி கலகலப்பிரியா. பகிர்தலுக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. அந்த இடத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டீங்க ப்ரியா..

பதிவின் எழுத்துக்களைப் பெரிது படுத்த முடியுமா?

தமிழ் மதுரம் said...

காவியம் அருமையாக உள்ளது. படிப்பதற்கு எளிமையாக இனிய உரை நடையில் அமைந்துள்ளது. தொடர்ந்தும் இப்படி நிறையத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். பகிர்வுக்கு நன்றிகள் கலகலப்பிரியா

ஆர்வா said...

உங்க‌ அனுபவங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு

கலகலப்ரியா said...

அப்டியா புலிகேசி... அப்புறம் என்னாச்சு... =))

நன்றி மயில்ராவணன்...

என்ன தப்பு அமைச்சரே...

நன்றி பித்தனின்வாக்கு....

நன்றி சந்தனா.... எழுத்தின் அளவு அளவாக இருக்கிறதாங்...?

நன்றி கமல்...

நன்றி கவிதைக்காதலன்...

Veliyoorkaran said...

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

க.பாலாசி said...

கிளித்தட்டுன்னா என்னங்க...??

பாம்பு நல்லதுதான்... ஆனாலும் பாத்தா அடிக்கத்தான் தோணுது....

கலகலப்ரியா said...

வருகைக்கு நன்றி வெளியூர்க்காரன்...

கிளித்தட்டு கிராமங்களில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டு... பாலாசி...