header photo

Tuesday, November 15, 2011

வண்ணநிலவனின் வண்ணக்கலவை அல்லது கடற்புரம்

கடல்புரத்தில்
__________________________________________________________


முன்னுரை படித்துவிட்டு அத்தியாயங்களுக்குள் அடியெடுத்து வைப்பது நன்று என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்... யார் சொல்லி எதை நான் கேட்டிருக்கிறேன்... தான்தோன்றியான எனக்கு எப்போதாவது தானாகவே தோன்றினால் மட்டுமே அதைச் செய்வது வழக்கம்... 

கடற்புரத்தைப் பார்த்ததும் ... “இங்கு படகுகள் வாடகைக்கு விடப்படும்” போர்ட்டையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்... மணலில் கால் புதையப் புதையக் கிளம்பியாகி விட்டது... 

அந்த மொழி முற்றிலும் வேற்று மொழி போல் தோன்றினாலும்... வாசிப்பதில் எதுவும் சிரமம் ஏற்படவில்லை... ஆச்சரியப்படும் விதமாக... வட இலங்கையில் பாவனையில் இருக்கும் சொற்கள் ஆங்காங்கு சிந்தியிருந்தன... சாரம்.. குசினி... வடலி.... 

அப்பச்சி என்னும் சொல் கூட வட இலங்கையில் உண்டு... ஆனால் அப்பாவின் அம்மாவையே அப்பிச்சி அல்லது அப்பாச்சி என்று அழைப்பார்கள்... இங்கு அப்பாவை அப்பச்சி என்கிறார்கள்.... ஹூம்... 

இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைப் பார்த்த பின்னும்.. படித்து முடித்ததன் பின்னரே... முன்னுரையைக் கவனமாக ஆராய்ந்தேன்... 

கடலை மையமாக வைத்து புரத்தில் “மணப்பாடு” என்னும் ஊரை வைத்துத் தீட்டியிருக்கிறார்... கடல்புரத்தின் அட்டை ஓவியம் போல... அழகான ”வண்ண”க்கலவை அது... 

1977-இல் முதற் பதிப்பு வெளிவந்திருக்கிறது.... அந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு நாவலை இவ்வளவு அநாயாசமாகக் கொடுத்திருப்பது... வண்ணநிலவன்.. அவர்பாலும், அன்பின் பாலும் வைத்த அசராத நம்பிக்கையைக் காட்டுகிறதோ.. என்று அசர வைக்கிறது... 

அட்டைப் புறத்தில் நம்ம சாயாவனம் சா. கந்தசாமியோட முத்தாய்ப்பு... அதை விட எப்படிச் சொல்ல முடியுமென்று தோன்றவில்லை... 

*வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும், சாத்தியமே என ஏற்றுக்கொள்லும்படி சொல்கிறது இந்த நாவல். விஷயத்தை விட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். எதையும் சாதிக்கவல்ல பாஷை இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது

இன்னும் பல காலத்துக்கு கடற்புரத்தில் சிறந்த நாவலாக இருக்கும்*

இதைச் சொன்ன சா. கந்தசாமி... ஆரம்பத்தில்... ”கிளர்ச்சி தரும் காட்சிகள் கொண்ட நாவல் அல்ல”.. என்று சொன்னது வாஸ்தவம்தான்... கிளர்ச்சி தரும் காட்சிகள் இல்லாமலிருக்கலாம்... ஆனால்... அங்குள்ள ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் புரளும் உணர்வுகளையும்... பிலோமிக்குள் புதைந்து போகும் உணர்வுகளையும்... ரஞ்சிக்குள் புதைந்திருக்கும் உணர்வுகளையும்... நீட்டி முழக்கி உருப்போடா விட்டாலும்... அல்லது அப்படி விட்டதனாலேயே... உள்ளக் கிளர்வுகளைத் தடுக்க முடியவில்லை.... உணர்ச்சிகளைக் கண்ணீரில் கொட்டி அழவும் முடியவில்லை... 

கடல்புரத்தில்... ஒரு விதமான அவஸ்தை... தேவையான அவஸ்தை....

11 ஊக்கம்::

vasu balaji said...

/கடல்புரத்தில்... ஒரு விதமான அவஸ்தை... தேவையான அவஸ்தை..../

ஒரு நல்ல பாடலோட அழகை பாட்டு முடியும்போது மிருதங்க வித்வான் வைக்கிற முத்தாய்ப்பு எங்கயோ கொண்டு போய்டும். இந்த வரி அப்படித்தான்.

பொதுவா வாசிப்பனுபவம் பெரும்பாலும் ஒரு கதைச் சுருக்கமாவோ, கதாபாத்திரத்தின் தனித்தன்மைய சொல்றதாவோ அமைஞ்சுடும். கதையோட ஆன்மாவை பட்டும் படாம சொல்லி, மொழிச்சிறப்பை, கதை சொல்லும் அழகைச் சொல்லி படிக்கத்தூண்டியது அழகு.

துபாய் ராஜா said...

கடல்புறத்தில்... இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தொலைக்காட்சியில் தொடர் நாடகமாக வந்தது. லிவிங்ஸ்டனும், பிலோமி பாத்திரத்தில் சபீதா ஆனந்தும் நடித்ததாக ஞாபகம்.

துபாய் ராஜா said...

எனக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி செல்ல விரும்பும் ஊர் "மணப்பாடு".

கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் கடலொட்டியப் பாதையில் அமைந்த அழகான கடலோர கிராமம்.

"இயற்கை" படத்தை ஜனநாதன் இங்குதான் எடுத்தார். தனது பலபடங்களின் காட்சிகளை பாரதிராஜாவும் மணப்பாட்டில் எடுத்துள்ளார்.

Mahi_Granny said...

வண்ண நிலவனின் சிறந்த நாவல்களில் ஒன்றை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . மணப்பாடை சுற்றி உள்ள கடற்கரைக் கிராமங்களில் வாழ்பவர்கள் எல்லோரும் வட இலங்கைத் தமிழ் போல் பேசுகிறவர்கள் தான். என்னையும் சேர்த்து. மீன் பிடிக்கிறவர்கள் , தவிர கிராமங்களின் மற்ற ஆண்கள் கொழும்பில் வியாபாரம் பண்ணியவர்கள் தான் 1964 வரை. நூலின் முன்னுரையை சொன்னதிலும் அழகு. தொடருங்கள்.

அது சரி(18185106603874041862) said...

||மணலில் கால் புதையப் புதையக் கிளம்பியாகி விட்டது... ||

ஒற்றை வரியில் அழகான வெளிப்பாடு. கடல் என்று நினைத்தாலே எப்பொழுதோ மணலில் கால் புதைய நடந்ததும் அதை ஒட்டிய நினைவுகளும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.

அது சரி(18185106603874041862) said...

||கடற்புரத்தைப் பார்த்ததும் ... “இங்கு படகுகள் வாடகைக்கு விடப்படும்” போர்ட்டையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்...||

எனக்கு “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்”னு ஒரு போர்டு ஞாபகம் வந்தது :))

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி பாலா சார்...

கலகலப்ரியா said...

@துபாய் ராஜா

ஓ... தொலைக்காட்சி.. நாடகம் பற்றிய அறிவு எல்லாம் ரொம்பக் கம்மி... தகவலுக்கு நன்றி ராஜா..

கலகலப்ரியா said...

@Mahi_Granny

உங்களோட தொடர் ஊக்கத்துக்கு நன்றி மஹி.. =)

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

ம்ம்... ஆமாம் ஞாபகங்களை அவ்வளவு இலகுவாகத் தொலைக்க முடிவதில்லை... சிலபல நேரங்களில் அத்தியாவசியமானவையும் கூட..

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

அது சரி.. :>