header photo
Showing posts with label திரைக்கதை. Show all posts
Showing posts with label திரைக்கதை. Show all posts

Tuesday, January 12, 2010

காமரோனும்.. அவதாரும்...நடுவே நாமும்...



ம்ம்... இல்ல... வேண்டாம்.. பார்க்கலாம்.. வேண்டாம்.. ம்ம்.. ஊஹும் (பூ... இதழ் எல்லாம் வச்சுக்கலை..) பதினெட்டாவது தடவையா யோசித்து... பார்க்கலாம்னு முடிவெடுத்த படம் அவதார். சயன்ஸ் ஃபிக்ஷன்னாலே காத தூரம் ஓடுற என்னை.. ஜேம்ஸ் காமரோனுடன் இன்னும் எதுவோ சேர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தது. ஸ்னோவில் கால் புதையப் புதைய காட்டுக்குள் வாக்கிங் போகலாமென்று அழைத்த என்னோட பாலிவுட் ரசிகத் தோழியை தற்காலிகமாகத் திசைதிருப்ப அப்போதைக்கு கிடைத்த ஒரே வழி அவதார் மட்டுமே.

நெட்ல எல்லாம் புக் பண்ணத் தோணலை... அதுதான் ரொம்பப் பழசாப் போன படமாச்சேன்னு.. கைய வீசிக்கிட்டு.. படம் தொடங்க முக்கால் மணி நேரம் முன்னாடிப் போய் க்யூவில் நின்றோம். என்ன இவ்ளோ ஜனங்க? என்ற கேள்விக்கு... "ஆல்வின் அண்ட் த சிப்மங்க்ஸ்" பார்க்க வந்திருப்பாங்கன்னு சமாதானம் சொன்னேன்.

எங்கள் முறை வந்தபோது இரண்டே இரண்டு சீட் தான் இருக்கு.. அதுவும் முன் வரிசைலன்னான். எனக்கு அப்பவே லேசா தலைய சுத்திச்சு. பின் வரிசைல நாலாவது வரிசை தாண்டி முன்னாடி போனதில்லை... (நிறைய டிவிடி + யூ ட்யூப் புண்ணியம்..). சரி இதுவாவது கிடைச்சதே, பெரிய புண்ணியம்ன்னு..  முப்பாரிமாணக் கண்ணாடி சகிதம் களத்தில் இறங்கினோம்.

சீட்டில் உட்கார்ந்ததும் காலை நல்லா நீட்டி உட்கார்ந்த பாலிவுட்டிடமிருந்து.. "முன் சீட்ல இது ஒரு வசதி"ன்னு ஒரு ஆப்டிமிஸ்டிக் காமென்ட் வந்தது. ம்க்கும்னு முனகிக்கிட்டே 3D கண்ணாடிய விளம்பரத்துக்கும் மாட்டிக்கணுமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே, தலையைப் பின்னாடி சாய்த்துக் கொண்டு... "இப்டி சாய்ஞ்சுக்கிட்டே பார்க்கலாம்" என்று ரெண்டாவது காமென்ட் வந்தது. விளம்பரம் முடியுறதுக்குள்ளேயே எனக்கு பின் கழுத்து சுளுக்கிக்கொண்டு விட்டது.



ஒரு வழியா படம் ஆரம்பிச்சது... கண்ணில 3D மாட்டிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். பிடித்தது சனியன்... தலை கிர்ர்ர்ர் என்று எங்கேயோ போனது. முப்பரிமாண எஃபெக்ட்டா அல்லது சீட் எஃபெக்ட்டா.. ஜேம்ஸ் காமரோனின் மூழ்கிப்போன டைட்டானிக் எஃபெக்ட்டா தெரியல. இப்போதானே ஆரம்பிச்சிருக்கு, முடியுற வரைக்கும் எப்படித் தாக்குப் பிடிக்க போறோம்னு புரியல. பாதில முடியல ஸாரின்னு சொல்லிட்டு போக வழியில்லாம, இரண்டு வாரம் முன்னாடிப் பார்த்த 2012 இல்... படம் முடிய முன்னாடி எழுந்து போன இரண்டு பேரைப் பார்த்து சிரித்த என் பாழாப் போன சிரிப்பு என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது.

சமாளிப்போம்னு... கண் மூடியபடி கொஞ்சம்.. பாதிக் கண் மூடியபடி கொஞ்சம்.. ஒற்றைக் கண் (நெற்றிக்கண் இல்லப்பா) திறந்தபடி கொஞ்சம்.. முழுக்கண்ணும் திறந்தபடி கொஞ்சம்.. 3D கண்ணாடி கழற்றிக் கொஞ்சம்.. என்று இடைவேளை வரை பார்த்து/கேட்டு சமாளித்தாயிற்று. அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் நாலு அடி பின்னால் நின்று மிக மிக ஜாக்கிரதையாக யன்னல் வழி தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்க்கும் எனக்கு விதி "பண்டோரா" அவதாரத்தில் வந்தது. பேசாம ஷில்ட்ஹோர்ன் மூவிங் ரெஸ்டாரன்டுக்கே போயிருக்கலாம் என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டேன்.

இடைவேளையின் அருமை தெரிந்தது அன்றைக்குத்தான். நேரா பாத்ரூமுக்கு ஓடி குளிர்தண்ணீர் வாரி முகத்தில் இறைத்துக் கொண்டு வெளியில் வந்து ஒரு கோலா வாங்கி சாப்ட்டு தெம்பா உள்ளே சென்றேன்.

அப்புறம் ஏனோ எனக்குத் தலை சுற்றல் நின்று விட்டிருந்தது. கழுத்துச் சுளுக்கு போன இடம் தெரியவில்லை. அவதார் உருவங்கள் எல்லாம் நிஜமாக மாறிப் போயின. அவர்களின் வால்கள் மறைந்து விட்டிருந்தன, அவர்கள் கண்களில் தெரிந்த உணர்ச்சிகள் என் கண்ணிலும் தொற்றிக் கொண்டன. பக்கத்திலிருந்தவள் பக்கம் சரிந்து  "இது எங்கள் கதை".. என்று சொன்னேன். ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அதன் பின்... சில மாதங்களுக்கு முன்... நான் அங்கிருக்க வேண்டுமென்று ஏங்கிய... என் தேசத்தில்.. அவதாரங்களுடன் அவதாரமாக...


இராட்சத ஹெலிகாப்ட்டர்களின் சத்தங்களுக்கு மத்தியில்... எரி குண்டுகளுக்கு நடுவே... ஜேம்ஸ் காமரோனின் நீர்நாரையின் அவதாரமான tetrapteron - இல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன்... தாய்க்குத் தாயான தாய்மண் போல்... மரம் விழுந்தபோது விழுந்தேன்... அவதாரங்கள் சிதறியபோது சிதறினேன்... கதறிய போது கதறினேன்... நெற்றிக்கு நேர் குழல் துப்பாக்கி நீட்டிச் சுட்ட போது... நெற்றியில் உள்வாங்கினேன்... ஐ டிசர்வ் இட் என்று சொல்லிக் கொண்டேன்..  தீயின் கொடு வெப்பம் உணர்ந்தேன்...

வெறுமை... கொடுமை... வீரம்.. துரோகம்... துளியாக ஆதரவு... காற்றிலாடும் அந்தத் தூய ஆத்மாக்களான ஜெல்லிகளில் ஆத்மா பறப்பது போன்றும்... அதே சமயம் நீரில் வாழும் ஜெல்லிகளின் விஷத்தன்மை உணர்வது போன்றும்... மாற்றி மாற்றி அலைக்கழித்தது...



கடைசியில்... ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும் போலும்... ஆனால் அது பண்டோராவில் மட்டும் சாத்தியமான ஒன்று... பூமியில் நடக்கச் சாத்தியக் கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!