செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்து
அடங்கியமர்ந்து வேடிக்கை காட்டும் தருணம்..
உடலின் விளிம்புவரையெட்டியெட்டித் தொட்டுத்
தட்டியலையும் கண்ணாமூச்சியாட்டம் தாண்டும்
சொல்லாத எல்லை "செல்லாது" வாவெனக் கூறி
மெல்லச் செல்லமாய்க் காதுபிடித்திழுத்திழுத்தமர்த்து ம்
கருவிருப்பின் உயிரீர்ப்பு விசையின் திசைகாட்டும்
அருவுருவப் பலகையின் மேலொலிக்கும் அசரீரி
சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி...
________________________________________________________________
திருநடமிடும் வாத்தியக் குயில்கள் மாதிரி ஒன்று வேணும் ப்ரியா, உரிமையுடன் கேட்கும் கயலுக்காக.. முயற்சி செய்தது..
________________________________________________________________
சில வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு ஆசானுக்கு எதிர்பாராத விதமாக cerebral haemorrhage ஏற்பட்டுச் சில வாரங்கள் கோமா நிலையிலிருந்து, முழுவதுமாக மீண்டு வந்து, சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கை என்பது தூங்கி விழிப்பது போன்றது, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் "வாழுங்கள்" என்று சொன்ன அந்தக் குரலும்,, அதன் தொனியும் மறக்கக் கூடியதன்று..
||சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி..|| சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்..
அன்று வீட்டிற்கு வந்த போது வாகனம் தவிர்த்து நடந்து வந்து கொண்டிருந்தேன்..
||சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் ||
நமக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கும்.. குசல விசாரிப்புகள்.. சில சமயங்களில் அப்பட்டமாகக் கவனிக்கலாம்... அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.. அதை வைத்து உங்களை இவ்வாறு இம்சை செய்யலாம்.. ம்ம்..
________________________________________________________________