header photo
Showing posts with label அயன் ராண்ட். Show all posts
Showing posts with label அயன் ராண்ட். Show all posts

Sunday, October 10, 2010

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லையே... ஸோ...

மிகவும் தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் அயன் ராண்ட் பற்றிய கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. யாரோ, எதுவோ சொல்கிறார்கள் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஜெயமோகனின் மத்தகமும் (http://kalakalapriya.blogspot.com/2010/02/blog-post.html), பாலாவின் நான் கடவுளில் அவரின் ஏழாம் உலகமும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வலைகள் இன்னமும் அதே அளவில் இருந்து கொண்டிருக்கையில், அயன் ராண்ட் பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துகள் அதற்கெதிரான சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. 

நான் படித்த அளவில் ஜெயமோகனிடம் அவரின் ஒரு வாசகர் அயன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged பற்றிப் பேசச் சொல்கிறார். ஜெயமோகன் அவர்களும் உடனே பேச ஆரம்பிக்கிறார். http://www.jeyamohan.in/?p=3405 (இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் மட்டும் படித்தாராம்...)

அவர் அங்கே குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி, வேளாண் பட்டதாரிகளின் திமிர் இது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. புரிந்த அளவில் சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம். பலவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 

அயன் ராண்டின் தத்துவங்களை நேசிப்பவர்களை அயன் ராண்டை வழிபடுபவர்கள் என்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார். நான் ஜெயமோகனையும் படிக்க ஆரம்பித்திருப்பதால் இவரையும் வழிபடுகிறேன் என்று இன்னும் யாராவது சொல்லிக் கொள்ளலாம். 

அங்கே பாரு சாமி, அங்கே பாரு ஆராதனை, அங்கே பாரு தூபம் என்று காட்டி வழிபட வைப்பது வேறு. சுயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, அது அயன் ராண்டோ, பாலகுமாரனோ, ஜெயமோகனோ அல்லது தெருவில் நடந்து போகும் ஒரு குப்புசாமியோ போகிற போக்கில் அதே கருத்துகளை அனாயாசமாகச் சொல்லிக் கடக்கும்போது, "அட" என்று தேங்குதலும், "ஆமாம்" என்று சிந்தனையுடன் நீங்குதலும் இயல்புதான்.


||நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.||

இப்படி ஜெயமோகன் குறிப்பிடுவது மிக மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது. முக்தி நிலை என்பது விடுதலை, போகங்களையும் அதிகாரத்தையும் அடையும் பொருட்டு நாட்டுப்பற்றையும், பண்பாட்டுப் பற்றையும் துறப்பது அடிமைச்செயல்?! இதை அயன் ராண்ட் படித்தால், அயன் ராண்டைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் படித்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.  செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது. 

அவர் சொன்ன முக்திநிலை பற்றிய விடயம் மிக நல்ல விடயம்தான். ஆனால் அதை எதற்கு அயன் ராண்ட் பற்றிய விவாதத்தில் வைக்கிறாரென்று புரியவில்லை. அயன் ராண்டைப் புரிந்து கொண்ட இலட்சணம் இவ்வளவுதானா?! அயன் ராண்ட் இவ்வளவுதானா?! தனி மனித சுதந்திரம்... தனிமனித முக்கியத்துவம்.. அதன் உன்னதம் பற்றி மிகத் தெளிவாக, மிடுக்காகச் சொன்ன ஒரு விடயத்தை ... அதிகாரம், போகம் என்பதில் அடக்குவது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை. 

||இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.  அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். ||

அயன் ராண்டின் தத்துவ சிந்தனை சக மனிதர்களை வென்றடக்க நினைக்கத் தூண்டும் என்கிறார். நல்ல வேளை இதைக் கேட்பதற்கு அயன் ராண்ட் உயிருடன் இல்லை.  அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும். 

அவரின் எழுத்தில் சித்தரிக்கப்படும் நாயகன் மற்றும் நாயகி பிடிவாத குணமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசும் மொழி மிக மிக மிடுக்குடையதாக இருக்கும். போலித்தனம் சற்றுமிருக்காது. இது இப்படித்தான், நான் இப்படித்தான், யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது, என்பதாக இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாது மிகவும் நிர்வாணமாக, அவர்களின் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களாக இருப்பார்கள்.  சாதாரணமாக நம் சமூகத்தினர் பார்வையில் திமிர் பிடித்தவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும். 

ஜெயமோகனுக்கே இந்த மிடுக்கு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடிய ஒன்றை, என்னால் ரசிக்க முடியும். ஆனால்.... ம்ம்.. 

||தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.||

இதை இவர் எப்படிப் போலியானது என்று குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. உண்மையில் இவை சற்றும் போலியற்றவை. ”ஃபௌண்டெய்ன் ஹெட்” படிக்காதவர்கள் பாலச்சந்தரின் ”வறுமையின் நிறம் சிகப்பு” பார்த்திருந்தால், அதில் கமலஹாசன் எவ்வாறு அவரின் சுயத்திற்காகத் தன்னை விட்டுக் கொடுக்காது அவ்வளவு துன்பத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பாரோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான பாத்திரம் இந்தப் புத்தகத்தில் வரும் ரோர்க்கினுடைய பாத்திரம். 

||அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.||

இதில் என்ன சொல்ல வருகிறார், சுந்தரராமசாமி அயன் ராண்டின் புறவயவாதத்தைத் தவிர்த்து அறிவுஜீவிமையை ஏற்றுக் கொண்டது சரி அல்லது தவறு என்று சொல்கிறாரா? இல்லையென்றால் சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு அயன் ராண்டை எடை போட முயற்சிக்கிறாரா?! எனக்குச் சற்றும் புரியவில்லை.. 

||அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.
·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O'Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது||

||அயன் ரான்ட் கடைசியில் மனநோய் நிலையத்தில் இருந்து இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.||

ஜெயமோகன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இடத்தில் முக்கியமான இடம் இது! தனக்குள் இருக்கும் அவரின் அடையாளத்தை இது உரக்கவே பறைசாற்றுவதாகவே நான் நினைக்கிறேன். 

இதைப் பார்த்தாலே தெரியும்! ஒரு சுய சிந்தனை கொண்ட "உத்தமமான" மனுஷி இவ்வளவு சிரமங்களுக்கப்பாலும், தன்னை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த மனுஷி. போலியாக எதையும் அணிந்து கொள்ளாது, செம்மறி ஆடுகள் போன்று வாழாது தானாகவே வாழ்ந்த ஒரு மனுஷி, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், ஜெயமோகன் அவர்கள் போன்று ஆழமாகச் சிந்திப்பது போல மிக மிக மேலோட்டமாகப் புரிந்து கொண்டு மட்டம் தட்டக் கூடிய உலகத்தில் தனித்து, தான் தானாகவே இருப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மன உறுதி இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தில், இப்படி ஒரு மனுஷிக்கு மன அழுத்தம் வராதிருந்தால்த்தான் ஆச்சரியம். 

உலகத்தில் புகழ்பெற்ற என்று பெயரிடப்பட்ட படிகளில் நின்று கொண்டிருப்பவர்களில் நிறையப் பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. ”நீட்சே”யை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அவதிப்பட நேர்ந்தால், அவரின் வாசகர்கள் அவரை உதாசீனப் படுத்தாதிருக்கட்டும். (நான் உட்பட..)

நிற்க... 

அயன் ராண்டை விமர்சிப்பதற்கு, வேண்டுமென்றே கள்ள உறவு என்பது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதென்ன?! அவரின் வாழ்க்கையை இவர் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான் முடியுமா?! கண் முன்னே சாட்சியாகிப் போன, டயானாவைக் கூட இவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?! 

இன்னொரு வாசகர் மிக நேர்மையாக ஜெயமோகனின் கூற்றை விமர்சிக்கிறார். அதை ஜெயமோகன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை. அந்த வாசகர் ஆங்கிலத்தில் எழுதியதும், ஜெயமோகனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை, அயன் ராண்ட் என்ன சொல்கிறார் என்று சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்று அந்த நபர் சொன்னது ஜெயமோகனுக்கு வசதியாகப் போயிற்று. ஆங்கிலம் என்பது ஒரு அறிவில்லை, இதைப் பற்றிக் கொண்டு எத்தனை காலத்துக்குத் தொங்கப் போகிறார்கள் என்று சீற்றத்துடன் கேட்டிருந்தார். ஆமாம் அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆங்கிலம் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து விடுமென்பதில்லை. ஆனால் அதைச் சொல்லி இந்த வாதத்தை, வெட்டி விவாதமென்று ஒதுக்கி அதிலிருந்து தப்பிப்பது விவேகமாகாது!!! 

||எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. ||

அதாவது இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் நாவலை மட்டுமே படித்திருக்கிறாராம். அதற்கு மேல் அயன் ராண்ட் குப்பை என்பதுதான் இதன் சாரம். அதாவது நான் இப்போ ஜெயமோகனின் மத்தகத்தைப் படிக்காது, ஏழாம் உலகத்தைப் படிக்காது, இவரின் இப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்தால் மிகவும் எளிதாக, ஜெயமோகனைப் புரிந்து கொண்டேன், இவர் இவ்வளவுதான் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லிக் கொள்ளலாம். 

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஃபௌண்டெய்ன் ஹெட்டையும், அயன் ராண்டையும் புரிந்து கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால்.. அயன் ராண்டைப் பின்பற்றினால் நாடு சுயநல நாடாகிவிடுமென்று இவர் பேசிக் கொண்டிருக்க மாட்டாரென்றே தோன்றுகிறது. 

யாரோ அயன் ராண்டைப் படித்த மாணவர்கள் சட்டம் அவர்களின் கைகளிலென்பது போல் சிகரட் பிடித்துக் கொண்டு போவதைக் கூட எதற்காகவோ குறிப்பிடுகிறார். மிகவும் நகைப்புக்குரிய சுட்டுதல் இது. தமிழ் சினிமா பார்த்து ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு ஒப்பாக இதைச் சொல்கிறார். அயன் ராண்டைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், கவனிக்க, புரிந்து கொண்டவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். 

அயன் ராண்ட் சுயநலம் பற்றிப் பேசுவது, தன்னார்வம் பற்றியது, சுய மரியாதை பற்றியது, சுயம் பற்றியது! முடிந்தால் படிக்கலாம்! இல்லையென்றால், படிக்கவில்லை எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். அது சொல்ல முடியவில்லை?! அதையெல்லாம் விட இப்பொழுது எல்லாரும் புதிதாக ஒரு விஷயம் சொல்கிறார்கள், நான் குறிப்பிட்ட ஒரு நாவலாசிரியரைப் படித்தால், அவர் கடந்து செல்ல வேண்டியவர் என்கிறார்கள், ஜெயமோகனின் வாசகரொருவரும் அயன் ராண்ட் பற்றி அப்படிச் சொல்கிறார்! ஏனென்று புரியவில்லை..! 

தேடுதல் இருப்பவர்கள் எங்கும் தேங்கிவிட மாட்டார்கள்...! முக்கியமாக அயன் ராண்ட்டைப் புரிந்தவர்கள், தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் தேங்க மாட்டார்கள்..! 
_________________________________________________________

தொடர்புடைய சுட்டிகள்: 

(இவரின் சுஜாதா சம்மந்தமான கட்டுரைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது படிக்கலாமென்று போய்ப் படிக்க ஆரம்பித்து ஒரு விதமான அயர்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது அயன் ராண்ட் பற்றி இவரின் வாசகர்கள் கேட்ட அனைத்தையும் நான் படிக்கவில்லை, இவரின் அனைத்துப் பதில்களையும் கூடப் படிக்கவில்லை. சிலவற்றில் என்னுடைய கருத்தைப் பதியலாமென்று தோன்றியதால் எழுதிவிட்டேன். 

இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது. 

ம்ம்... அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?! 

சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)

__________________________________________________________