header photo
Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Thursday, May 17, 2012

பேரன்புடைய மூத்த வீரர் மற்றும் ஜெயமோகன் அவர்கட்கு..

||ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்
இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே

இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.||

http://www.jeyamohan.in/?p=27320

__________________________________________



இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருப்பது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அதிலும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரியாத விடயம் என்று ஒன்று இந்த உலகத்தில் உள்ளதா என்பது பற்றி எனக்கு கிஞ்சித்தளவு சந்தேகம் கூட இல்லை. முட்டாளுக்கு எல்லாம் தெரியுமென்று முட்டாள்கள் சிலர் சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்கள் முட்டாள்களென்றும் எங்கள் ஜெயமோகனுக்குத் தெரியும். 



(கற்பு என்கிற கருமாந்திர வார்த்தையை அழி ரப்பர் வைத்து நானே அழிக்கிறேன், கற்பழிப்பு, நானும் ராணுவம்தான், நானும் ராணுவம்தான்)

நிற்க,

பாலியல் வன்முறை என்பது ஒரு போர்த் தந்திரம் என்பது எல்லாம் தெரிந்த ஜெயமோகனுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. தெரியாதிருப்பது வேறு, தெரிந்தும் தெரியாதது போலிருப்பது வேறு. அல்லது அவர் ராணுவத்தின் பால், அவர் தேசியத்தின் பால் கொண்ட பற்றாத காதல் அல்லது அசையாத நம்பிக்கை கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதிலும் நம்பிக்கை வேறு, கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு என்பதும் கண்டிப்பாக எல்லாம் தெரிந்த பேரறிவாளர் ஜெயமோகனுக்குத் தெரியும். 

உலகத்தில் பாலியல் வன்முறையில்லாத ராணுவ நடவடிக்கை இருந்ததா என்று கேட்டால், ரஷ்ய, அமெரிக்க, சீன, ஸ்பானிய, அல்பேனிய, ரோம, கிரேக்க , இதர, இதர, இதர வரலாறுகளை, காம, சோம, கோவ்ஸ்கி, இதர எலுமிச்சயோவிச், க்ரீன்விச், ப்ளூவிச் ஆகிய பெயர்கள் படைத்த உலக இலக்கியத்தை எல்லாம் ஒரு சிட்டிகை கூடக் கரைத்துக் குடித்திருக்காத எனக்கே “இல்லை, பாலியல் வன்முறையில்லாத ராணுவ நடவடிக்கை என்பது இருந்திருக்கச் சந்தர்ப்பமில்லை” என்றே தோன்றுகிறது. 



ஜெயமோகன் பாஷையில் சொல்வதானால், நண்பர்களே (மிக நேர்மையான வார்த்தைப் பிரயோகம்), அன்புள்ள மூத்த அரும்பெரும் தியாகப் பெருமக்களே நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. பாலியல் வன்முறையென்பது ஒரு புருஷன் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு ஒரு பெண்ணைப் புணர்வது மட்டுமில்லை. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் முலைகளை இறுகத் தடவி சோதனை நடத்தினாலும் அது பாலியல் வன்முறைதான். ஒரு ஆண் இன்னொரு ஆணின் ஆடைகளைக் களைந்து விட்டு சுவர்ப் புறமாக நிறுத்தி வைத்திருப்பதும் பாலியல் வன்முறைதான். உளவியல் ரீதியான மிகக் கொடுமையான வன்முறை. 

பேரன்புக்கும், பெரு மரியாதைக்கும் பாத்திரமான ஜெயமோகன் சொன்ன ஒரு கூற்று உண்மையிலும் உண்மை. அதாவது பொய்ப் பிரச்சாரம். ஆம்! இது சத்தியம்! பேரன்பு மிக்க மூத்த குடிகளே பாலியல் வன்முறை எவ்வாறு ஒரு இராணுவ நடவடிக்கைக்குப் பக்கபலமாகிறதோ, அதேபோல் ஒரு கொள்கை ரீதியாக (அது சரியா, தவறா என்று விவாதிக்க நான் வரவில்லை, இப்பொழுது இந்த விடயம் மட்டும்) போராடுபவர்களுக்கு மிகைப்படுத்தப்பட பிரச்சாரம் ஒரு ஆயுதமாகிறது. காதலிலும், யுத்தத்திலும் எல்லாம் நியாயப்படுத்தப்பட முடியுமென்றால், பாலியல் வன்முறையை நீ நியாயப்படுத்து, மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நான் நியாயப்படுத்துகிறேன். பாலியல் வன்முறையே நடக்கவில்லை, எல்லாரும் “சாமியோ ஐய்யப்பா” என்றபடி வலம் வந்து கொண்டிருந்தார்கள். மக்களுக்கு திருநீறும், நாமமுமிட்டு ஆன்மீகத் தொண்டு செய்தார்கள் போன்றதான பிரச்சாரம் எதற்கோ? எதிர்ப் பொய்ப் பிரச்சாரப் பண்பாடா? பண்புள்ள மூத்த வீர தியாகச் செம்மல்களே நீங்கள் ஒவ்வொருவரும் இப்படியாகத்தான் இருக்கிறீர்களென்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் மந்தையில் இரண்டாடு இப்படியாக இருந்தது என்பதை ஒத்துக் கொள்வதற்கு உங்களுக்குத் தேவை ஒன்றிருக்கிறது... YES, CHECK YOUR BALLS. 



தமிழ் சினிமாவில் ஏராளமான மிகைப்படுத்தல் உண்டு. பெண்களைக் கட்டிப் போட்டு வார்த்தையாலும், உடலாலும் பாலியல் வன்முறை செய்வது, காட்சி வேண்டுமானால் நாடகத்தன்மையாக இருக்கலாம், மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பேரன்பாளர்களே அதிலிருக்கும் உளவியல் தந்திரம் பொய்யல்ல. இந்த விதமான தாக்குதல் மூலம் எதிராளியை இரு வேறு விதமாகப் பலவீனப்படுத்தலாம். ஒன்று சோர்ந்து போகச் செய்யலாம் அல்லது நரம்பு புடைக்க உணர்ச்சிவசப்படச் செய்யலாம். இந்த உளவியலைத் தெரிந்து வைத்திருக்காத பால்குடி மறக்காத இராணுவத்தினர் இருக்கலாம். ஞாமறியோம் ஜெயபரமே. 

காற்பந்தாட்டத்தில் பெனால்ட்டி கிடைக்காத வண்ணம், பந்தை உதைப்பதுபோல் முட்டியைப் பெயர்ப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது காற்பந்தாட்டப் பயிற்சியாளரின் மாபெரும் கடமைகளில் ஒன்று போலவே, இராணுவப் பயிற்சியாளர்களுக்கும் சில பயிற்சிகள் உண்டென்பதை மறுக்க முடியாது (ஏன் முடியாது, எல்லாம் தெரிந்தவர்கள் மறுக்கலாம், SHUT THE FUCK UP, என்னைச் சொன்னேன்). 



இந்திய ராணுவம் நம் ஊரில் இருந்த போது நான் சிறுமி. எதுவும் புரியாத வயது. ஆனாலும் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. இராணுவம் ரோந்து வரும்போதெல்லாம் பெண்கள் சேலையைச் சுற்றோ சுற்றென்று சுற்றி கழுத்து வரை போர்த்தியிருப்பார்கள். இது மிகையான பிரச்சாரத்தின் காரணத்தினாலேயே கூட இருக்கலாம். இந்த இடத்திலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நியாயப்படுத்த எனக்கு இன்னொரு சந்தர்ப்பம். இதனால்தான் மக்கள் விழிப்புடன் இருந்தார்கள். இராணுவம் வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குள் இருக்காது பிள்ளை குட்டி, கிழடு கட்டைகளுடன் வீட்டிற்கு வெளியில் வந்து கும்பலாக நின்று கொண்டிருப்பார்கள். பண்பாளர்கள் கூட்டத்தில் வைத்து ஒரு பெண்ணை வற்புறுத்த யோசிக்கத்தானே செய்வார்கள். உளவியல். 



பாலியல் வன்முறையை நேரடிக் காட்சியாகப் பார்த்தால் மட்டுமே நம்புவேன் என்கிறவர்களுக்கு சுவாமி நித்தியானந்தா போன்றவர்கள் கடவுளைக் காண்பிப்பது போல் ஏதாவது அருள் பாலித்தால் உண்டு. நானும் ஊரிலிருந்த போது மற்றவர்களின் வாய்ப் பிரச்சாரத்தின் மூலமாகவே இந்தக் கொடுமையை அறிந்திருக்கிறேன். 

ஜெயமோகன் கட்டுரையில் ஒரு பெரும் பண்பாளர் “கட்டு”ரை ஒன்றை அனுப்பியிருக்கிறார். >>>> 

|| ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார். ஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்|| 

என்பதாகச் சொல்கிறது அந்தக் கதை இல்லை கட்டுரை. இல்லை, தெரியாமல் கேட்கிறேன் “எல்.டி.டி.இ என்ன கேனைங்களா?” பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு எண்பது வயது மூதாட்டிதானா கிடைக்க வேண்டும். அது பிரச்சாரத்திற்கு எந்த விதத்தில் வலு ஊட்டுமென்று அறியாமலா அத்தனை காலம் அந்தப் போரை அவ்வளவு திறமையாக எடுத்துச் சென்றார்கள்? பேரறிவாளர்களின் எதிர்ப் பிரச்சாரம் இத்தனை கேவலமாக, கீழ்த்தரமாகவா பல்லை இளிக்க வேண்டும். 

போகட்டும் நான் ஒரு பிரச்சாரம் செய்கிறேன் பாருங்கள்: 

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றில் (பிரச்சாரத்திற்கு எதற்கு விளக்கமெல்லாம்) ஒரு வழக்கு வந்தது. உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்துப் பெண் அவர். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு நடைப்பிணம் போலிருந்தார். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசினார். அவருக்கு இங்கு வதிவிடம் கிடைப்பது பற்றிய வழக்கல்ல அது. அவருக்கு நிரந்தர வதிவிடம் கிடைத்திருந்தது. அவரின் அந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டது. அவர் பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவர் பள்ளிக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். சில பெண்கள் முடக்கப்பட்டார்கள். பள்ளியின் இரண்டாவது மாடியில் ஒரு வகுப்பறையில் நாலைந்து பண்பாளர்கள் அவரிற்கு ”ஆன்மீக போதனை” செய்திருக்கிறார்கள். இன்றும் கூட அவரின் செயல்கள் இயந்திரத்தனமாகவே இருக்கிறது. உண்மைதான்! இராணுவ ஆன்மீகவாதிகள், அவர்களின் உடற் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்தப் பெண் அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு ஊடகவியலாளராகத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த சிரமபரிகாரம்தான் அது! 

இந்த வழக்கில் மொழி ரீதியான உதவிக்கு நான் அங்கிருந்தேன். அவராக இருந்து என் வாயால் அவர் வாக்குமூலத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மொழிபெயர்க்கும்போது மொழியை மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளையும் வாங்கி, ஏறத்தாழ அப்படியே அடுத்தவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறான தருணங்களில் அதற்கான தேவை சற்று அதிகமாகவே இருக்கிறது. வெளியில் வரும்போது நான் நடைப்பிணமாகி இருந்தேன். பிற்பாடு எனக்கு ஒரு மாத்திற்கு மூன்று மணி நேர உளவியல் ஆலோசனை, மூன்று மணி நேர தொழில் ரீதியான மேற்பார்வை ஆலோசனை தேவைப்பட்டது. இன்னும் கூட என்னாலேயே இதை ஜீரணிக்க முடியாதிருக்கும் பட்சத்தில், அன்பர்களே, பேரறிவாளர்களே பாதிக்கப்பட்டவர்களின் நிலமையைக் கொஞ்சம் உங்கள் மாபெரும் இலக்கியக் கற்பனாசக்தியில் கொண்டுவந்து பாருங்கள். 

செம்மறித் தோல் போர்த்திய நரிகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்துவிடுவது உங்கள் கடமையாக இருக்கலாம். ஆனால் குதறப்பட்டிருக்கும் வெள்ளாடுகளுக்கு இதற்கு மேலும் இப்படியாக இன்னொரு உ ளவியல் ரீதியான அநியாயம் ஏற்படுவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. MORONS ARE JUST MORONS, YOU BET GOD DAMNIT!!!

Sunday, October 10, 2010

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லையே... ஸோ...

மிகவும் தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் அயன் ராண்ட் பற்றிய கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. யாரோ, எதுவோ சொல்கிறார்கள் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஜெயமோகனின் மத்தகமும் (http://kalakalapriya.blogspot.com/2010/02/blog-post.html), பாலாவின் நான் கடவுளில் அவரின் ஏழாம் உலகமும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வலைகள் இன்னமும் அதே அளவில் இருந்து கொண்டிருக்கையில், அயன் ராண்ட் பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துகள் அதற்கெதிரான சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. 

நான் படித்த அளவில் ஜெயமோகனிடம் அவரின் ஒரு வாசகர் அயன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged பற்றிப் பேசச் சொல்கிறார். ஜெயமோகன் அவர்களும் உடனே பேச ஆரம்பிக்கிறார். http://www.jeyamohan.in/?p=3405 (இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் மட்டும் படித்தாராம்...)

அவர் அங்கே குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி, வேளாண் பட்டதாரிகளின் திமிர் இது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. புரிந்த அளவில் சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம். பலவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 

அயன் ராண்டின் தத்துவங்களை நேசிப்பவர்களை அயன் ராண்டை வழிபடுபவர்கள் என்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார். நான் ஜெயமோகனையும் படிக்க ஆரம்பித்திருப்பதால் இவரையும் வழிபடுகிறேன் என்று இன்னும் யாராவது சொல்லிக் கொள்ளலாம். 

அங்கே பாரு சாமி, அங்கே பாரு ஆராதனை, அங்கே பாரு தூபம் என்று காட்டி வழிபட வைப்பது வேறு. சுயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, அது அயன் ராண்டோ, பாலகுமாரனோ, ஜெயமோகனோ அல்லது தெருவில் நடந்து போகும் ஒரு குப்புசாமியோ போகிற போக்கில் அதே கருத்துகளை அனாயாசமாகச் சொல்லிக் கடக்கும்போது, "அட" என்று தேங்குதலும், "ஆமாம்" என்று சிந்தனையுடன் நீங்குதலும் இயல்புதான்.


||நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.||

இப்படி ஜெயமோகன் குறிப்பிடுவது மிக மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது. முக்தி நிலை என்பது விடுதலை, போகங்களையும் அதிகாரத்தையும் அடையும் பொருட்டு நாட்டுப்பற்றையும், பண்பாட்டுப் பற்றையும் துறப்பது அடிமைச்செயல்?! இதை அயன் ராண்ட் படித்தால், அயன் ராண்டைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் படித்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.  செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது. 

அவர் சொன்ன முக்திநிலை பற்றிய விடயம் மிக நல்ல விடயம்தான். ஆனால் அதை எதற்கு அயன் ராண்ட் பற்றிய விவாதத்தில் வைக்கிறாரென்று புரியவில்லை. அயன் ராண்டைப் புரிந்து கொண்ட இலட்சணம் இவ்வளவுதானா?! அயன் ராண்ட் இவ்வளவுதானா?! தனி மனித சுதந்திரம்... தனிமனித முக்கியத்துவம்.. அதன் உன்னதம் பற்றி மிகத் தெளிவாக, மிடுக்காகச் சொன்ன ஒரு விடயத்தை ... அதிகாரம், போகம் என்பதில் அடக்குவது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை. 

||இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.  அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். ||

அயன் ராண்டின் தத்துவ சிந்தனை சக மனிதர்களை வென்றடக்க நினைக்கத் தூண்டும் என்கிறார். நல்ல வேளை இதைக் கேட்பதற்கு அயன் ராண்ட் உயிருடன் இல்லை.  அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும். 

அவரின் எழுத்தில் சித்தரிக்கப்படும் நாயகன் மற்றும் நாயகி பிடிவாத குணமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசும் மொழி மிக மிக மிடுக்குடையதாக இருக்கும். போலித்தனம் சற்றுமிருக்காது. இது இப்படித்தான், நான் இப்படித்தான், யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது, என்பதாக இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாது மிகவும் நிர்வாணமாக, அவர்களின் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களாக இருப்பார்கள்.  சாதாரணமாக நம் சமூகத்தினர் பார்வையில் திமிர் பிடித்தவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும். 

ஜெயமோகனுக்கே இந்த மிடுக்கு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடிய ஒன்றை, என்னால் ரசிக்க முடியும். ஆனால்.... ம்ம்.. 

||தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.||

இதை இவர் எப்படிப் போலியானது என்று குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. உண்மையில் இவை சற்றும் போலியற்றவை. ”ஃபௌண்டெய்ன் ஹெட்” படிக்காதவர்கள் பாலச்சந்தரின் ”வறுமையின் நிறம் சிகப்பு” பார்த்திருந்தால், அதில் கமலஹாசன் எவ்வாறு அவரின் சுயத்திற்காகத் தன்னை விட்டுக் கொடுக்காது அவ்வளவு துன்பத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பாரோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான பாத்திரம் இந்தப் புத்தகத்தில் வரும் ரோர்க்கினுடைய பாத்திரம். 

||அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.||

இதில் என்ன சொல்ல வருகிறார், சுந்தரராமசாமி அயன் ராண்டின் புறவயவாதத்தைத் தவிர்த்து அறிவுஜீவிமையை ஏற்றுக் கொண்டது சரி அல்லது தவறு என்று சொல்கிறாரா? இல்லையென்றால் சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு அயன் ராண்டை எடை போட முயற்சிக்கிறாரா?! எனக்குச் சற்றும் புரியவில்லை.. 

||அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.
·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O'Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது||

||அயன் ரான்ட் கடைசியில் மனநோய் நிலையத்தில் இருந்து இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.||

ஜெயமோகன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இடத்தில் முக்கியமான இடம் இது! தனக்குள் இருக்கும் அவரின் அடையாளத்தை இது உரக்கவே பறைசாற்றுவதாகவே நான் நினைக்கிறேன். 

இதைப் பார்த்தாலே தெரியும்! ஒரு சுய சிந்தனை கொண்ட "உத்தமமான" மனுஷி இவ்வளவு சிரமங்களுக்கப்பாலும், தன்னை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த மனுஷி. போலியாக எதையும் அணிந்து கொள்ளாது, செம்மறி ஆடுகள் போன்று வாழாது தானாகவே வாழ்ந்த ஒரு மனுஷி, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், ஜெயமோகன் அவர்கள் போன்று ஆழமாகச் சிந்திப்பது போல மிக மிக மேலோட்டமாகப் புரிந்து கொண்டு மட்டம் தட்டக் கூடிய உலகத்தில் தனித்து, தான் தானாகவே இருப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மன உறுதி இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தில், இப்படி ஒரு மனுஷிக்கு மன அழுத்தம் வராதிருந்தால்த்தான் ஆச்சரியம். 

உலகத்தில் புகழ்பெற்ற என்று பெயரிடப்பட்ட படிகளில் நின்று கொண்டிருப்பவர்களில் நிறையப் பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. ”நீட்சே”யை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அவதிப்பட நேர்ந்தால், அவரின் வாசகர்கள் அவரை உதாசீனப் படுத்தாதிருக்கட்டும். (நான் உட்பட..)

நிற்க... 

அயன் ராண்டை விமர்சிப்பதற்கு, வேண்டுமென்றே கள்ள உறவு என்பது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதென்ன?! அவரின் வாழ்க்கையை இவர் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான் முடியுமா?! கண் முன்னே சாட்சியாகிப் போன, டயானாவைக் கூட இவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?! 

இன்னொரு வாசகர் மிக நேர்மையாக ஜெயமோகனின் கூற்றை விமர்சிக்கிறார். அதை ஜெயமோகன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை. அந்த வாசகர் ஆங்கிலத்தில் எழுதியதும், ஜெயமோகனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை, அயன் ராண்ட் என்ன சொல்கிறார் என்று சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்று அந்த நபர் சொன்னது ஜெயமோகனுக்கு வசதியாகப் போயிற்று. ஆங்கிலம் என்பது ஒரு அறிவில்லை, இதைப் பற்றிக் கொண்டு எத்தனை காலத்துக்குத் தொங்கப் போகிறார்கள் என்று சீற்றத்துடன் கேட்டிருந்தார். ஆமாம் அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆங்கிலம் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து விடுமென்பதில்லை. ஆனால் அதைச் சொல்லி இந்த வாதத்தை, வெட்டி விவாதமென்று ஒதுக்கி அதிலிருந்து தப்பிப்பது விவேகமாகாது!!! 

||எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. ||

அதாவது இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் நாவலை மட்டுமே படித்திருக்கிறாராம். அதற்கு மேல் அயன் ராண்ட் குப்பை என்பதுதான் இதன் சாரம். அதாவது நான் இப்போ ஜெயமோகனின் மத்தகத்தைப் படிக்காது, ஏழாம் உலகத்தைப் படிக்காது, இவரின் இப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்தால் மிகவும் எளிதாக, ஜெயமோகனைப் புரிந்து கொண்டேன், இவர் இவ்வளவுதான் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லிக் கொள்ளலாம். 

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஃபௌண்டெய்ன் ஹெட்டையும், அயன் ராண்டையும் புரிந்து கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால்.. அயன் ராண்டைப் பின்பற்றினால் நாடு சுயநல நாடாகிவிடுமென்று இவர் பேசிக் கொண்டிருக்க மாட்டாரென்றே தோன்றுகிறது. 

யாரோ அயன் ராண்டைப் படித்த மாணவர்கள் சட்டம் அவர்களின் கைகளிலென்பது போல் சிகரட் பிடித்துக் கொண்டு போவதைக் கூட எதற்காகவோ குறிப்பிடுகிறார். மிகவும் நகைப்புக்குரிய சுட்டுதல் இது. தமிழ் சினிமா பார்த்து ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு ஒப்பாக இதைச் சொல்கிறார். அயன் ராண்டைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், கவனிக்க, புரிந்து கொண்டவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். 

அயன் ராண்ட் சுயநலம் பற்றிப் பேசுவது, தன்னார்வம் பற்றியது, சுய மரியாதை பற்றியது, சுயம் பற்றியது! முடிந்தால் படிக்கலாம்! இல்லையென்றால், படிக்கவில்லை எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். அது சொல்ல முடியவில்லை?! அதையெல்லாம் விட இப்பொழுது எல்லாரும் புதிதாக ஒரு விஷயம் சொல்கிறார்கள், நான் குறிப்பிட்ட ஒரு நாவலாசிரியரைப் படித்தால், அவர் கடந்து செல்ல வேண்டியவர் என்கிறார்கள், ஜெயமோகனின் வாசகரொருவரும் அயன் ராண்ட் பற்றி அப்படிச் சொல்கிறார்! ஏனென்று புரியவில்லை..! 

தேடுதல் இருப்பவர்கள் எங்கும் தேங்கிவிட மாட்டார்கள்...! முக்கியமாக அயன் ராண்ட்டைப் புரிந்தவர்கள், தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் தேங்க மாட்டார்கள்..! 
_________________________________________________________

தொடர்புடைய சுட்டிகள்: 

(இவரின் சுஜாதா சம்மந்தமான கட்டுரைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது படிக்கலாமென்று போய்ப் படிக்க ஆரம்பித்து ஒரு விதமான அயர்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது அயன் ராண்ட் பற்றி இவரின் வாசகர்கள் கேட்ட அனைத்தையும் நான் படிக்கவில்லை, இவரின் அனைத்துப் பதில்களையும் கூடப் படிக்கவில்லை. சிலவற்றில் என்னுடைய கருத்தைப் பதியலாமென்று தோன்றியதால் எழுதிவிட்டேன். 

இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது. 

ம்ம்... அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?! 

சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)

__________________________________________________________


Tuesday, February 9, 2010

மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே...

"யானை மனம் மனித மனதைவிட நூறுமடங்கு பெரியது. அந்த கரும்பாறைக்குள் பத்துமனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால்  அது பேசுவதில்லை. புலம்புவதும் அழுவதும்இல்லை"

வாசித்து முடித்து ஒரு வாரமாகியும், அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் இம்மியளவு கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யானை என்பது உருவம் சார்ந்தும், சாராமலும் மிக மிகப் பெரிய விஷயம். இதில் நாடே சேவகம் செய்யும் யானை கேசவன், தம்புரானின் சேவகன் மற்றும் உயிர்த் தோழன். கதையின் கடைசி வரிகளில் கண்ணீருடன், ஒற்றைக் கால் தூக்கி மடித்து நிற்கும் கேசவன், நட்பிழந்து, உண்ணாது இளைத்த அதன் தேக பாரத்துடன் என் இதயத்தில் பாறாங்கல்லாக அமர்ந்து விட்டது.

"மத்தகம்", ஜெயமோகனின் குறுநாவல்! குறு நாவலா அது? எத்தகைய கரடுமுரடான பாதைகள், மலைக்குகைகள், ஆளை விழுங்கும் சகதிக் குழிகள் தாண்டிய மிக நீண்ட பயணம் அது.

//அவன் காலைப் பிடித்தபடி நானும் கூடவே சென்றேன். கேசவனுடைய பாதங்கள் மணலில் அமிழும் ஒலி பப்படம் நொறுங்குவது போல இருட்டுக்குள் கேட்டது. ஆற்றங்கரையோரத்து தாழைப்புதர் கூட்டங்களுக்குள் இருந்து உக்கில் ‘லுப் லுப் லுப்’ என்றபடி சலசலத்து ஓடியது. இன்னொரு சலசலப்பு. அது பாம்பாகவும் இருக்கலாம். ஆற்றின்கரையில் இல்லாத பாம்பு இல்லை. ”ஆனை போன வழியா போனா ஆபத்து இல்ல”//

நானும் யானையின் தேகம் மறைத்த கரடுமுரடான அப் பாதைவழி, அச்சத்தில் பாதி விழி மூடியபடி, மற்றைய உணர் புலன்களால் நடப்பவற்றை உள்வாங்கிய வண்ணம், அதன் கால் பிடிக்கவும் பயந்து சற்றுத் தள்ளியே போய்க் கொண்டிருந்தேன்..

சில மாதங்களுக்கு முன் திருத்தணியில் பத்து ரூபாயைப் பாகனிடம் கொடுத்து, யானையின் துதிக்கை நுனியில் என் தலையைக் கொடுப்பதற்குள் பல தடவை செத்துப் பிழைத்திருந்தேன். இதனாலேயே யானை எனக்கு அறிமுகம் என்று சொல்லிக் கொள்வதில் எள்ளளவும் சம்மதமில்லை.

சிறு வயதில் ஆடுமாடுகளை மணிக்கணக்காக அருகில் இருந்து பார்த்து வளர்ந்திருந்தும், அவை பற்றி எழுத வேண்டுமெனில் "ஆட்டிற்கு நான்கு கால்கள் உண்டு", "ஆட்டிற்கு ஒரு வால் உண்டு" என்ற நர்சரிப் பாடமே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில்....

வெள்ளையர் காலூன்றிய கால கட்டத்தின் அரசாண்மை, அதிகாரம்:

//"இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…”

”அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? ”

”இனி இந்நாட்டில் நம்முடைய சொல்லினு எதிர்சொல் உண்டாவுக இல்ல. இந்நுமுதல்”

”எந்நால் அவ்விதம் நினைச்சு கொள்ளுக… இனி இந்தக் கொட்டாரம் விட்டு எங்ஙும் போகுக வேண்டா”
//

 யானை:

//கண்கள் கரும்பாறையின் வெடிப்புக்குள் இரு ஆழமான துளைகளில் தண்ணீர் நிரம்பி நிற்பவை போல..
வெளுத்த பெண்ணின் பெருந்தொடை போன்று பெரிய கொம்புகள் என் தலைக்கு மேல் இருந்தன. தரை தொட்டபிறகும் கால் பங்கு மிஞ்சியிருக்கும் துதிக்கை. நெற்றியிலும் காதிலும் பரவிய சிவப்பு மாம்பூத் தேமல்..
நிரம்பிச் செல்லும் நதி நீரோட்டம் அசைந்து நெளிவது போல அதன் கரியதோல் அசையும்..
அவன் வயிற்றுக்குள் பெரியதோர் செம்புக் குட்டுவத்தை நகர்த்தியது போன்ற ஒலி எழுந்தது.
கேசவன் துதிக்கையை தூக்கி நீட்டி நுனிமூக்கை அசைத்து வாசனை பிடித்தான். துதிக்கை காற்றில் துழாவித் துழாவி அலைந்தது.

அதாக்கும் ஆனை. ஆனை மாதிரி கருணையும் இல்ல. ஆனை மாதிரி கொடுமயும் இல்லை. ஆனை ஆளு மாதிரி இல்லடே. அது மனுஷனுக்கு நூறு எரட்டியாக்கும். அப்ப கருணையும் வெறுப்பும் நூறு எரட்டி. அதாக்கும் கணக்கு. மனுஷனுக்கு தெய்வம் நாடாளும் தம்புரான். மிருகங்களுக்கு தெய்வம் காடாளும் ஆனை. ஆனையும் ஒரு பொன்னு தம்புரான் திருமேனியாக்கும்.”//


யானையின் காலின் கீழும், தந்தத்தின் நுனியிலும் சாவை எழுதிக் கொண்ட யானைப் பாகர்களின் வாழ்க்கை:

//”பலபட்டற எரப்பாளி. அவனுகக மத்த காலையும் ஆனை சவிட்டட்டு” 

”கொந்நே, என்னை ஆனை கொந்நே… டே  அருணாச்சலம்… பெரமு ஓடிவாடா… ஓடிவாடா”

”ஆசானே இவனுக்க மேல ஆனை கேறினப்ப இவனுக்கு மலமூத்திரம் மட்டும் போகல்ல…” //

//கழுமரத்தில் சாவதற்கு யானையின் காலில் சாகலாம். அது பாகனுக்கு விதிக்கப்பட்டுள்ள சாவுதான். என் அப்பாவும் என் தாத்தாவும் யானையால் தான் கொல்லப்பட்டார்கள். அப்பா மேலைத் தாமரைசேரி கிருஷ்ணனின் தந்தஙக்ள் மீது, ரத்தம்வழிந்த குடல் தெச்சிப்பூ மாலை போல தொங்கி மண்ணில் இழுபட, வைக்கோல் பொம்மை போல
//

அதற்கு மேல் அவர்களின் துணைகளின் மிகக் கொடுமையான வாழ்க்கை முறை:

//”அதுக்கு இப்பம் என்ன? செத்தவங்களுக்கு கவலை இல்ல. இருக்கவங்களுக்குல்லா வயிறுண்ணு இருக்கு. அந்த தீயில மண்ண வாரி இடணுமே மூணு நேரம். அதுக்கு மானம் மரியாத எல்லாம் விட்டு ஆடணுமே” //

//”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” //

தன்னிலையிலிருந்து கதை சொல்லும் பரமண்ணாவின் பல செயல்கள்  எவ்வளவு பரந்த மனத்துடன் சிந்தித்தாலும் கிஞ்சித்தும் நியாயப்படுத்த முடியவில்லை. அவனுக்கு இவன் செய்தது இவனுக்கு எவனோ செய்யப்போவது, துரோகமோ, தூக்கி விடுவதோ விதியின் வழி. விதி வலியதோ இல்லையோ, கொடியது என்று தோன்றுகிறது.

//”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து”//

இந்த வரிகளுடன் அந்தப் பெண் என்ன ஆனாள் என்ற பதைப்பு அப்படியே இருக்கிறது..

இவற்றையெல்லாம் மிக மிகத் துல்லியமாக, எழுத்தெழுத்தாக வடித்திருக்கும் ஜெயமோகன் பற்றி, மத்தகம் பற்றி நான் எழுதவதில் அர்த்தமோ அதற்கு எனக்கு அருகதையோ இருப்பதாகப் படவில்லை. குருடன் யானை பார்த்த கதை போல, நானும் இந்த மத்தகத்தைப் புரிந்து கொள்ள விழையும் செயலே இது..

ஜெயமோகனின் ரசனையான, உவமான உவமேயங்களுடன் கூடிய கவித்துவ  வரிகளும், நகைச்சுவை உணர்வும் கதை முழுதும் இறைஞ்சிக் கிடக்கின்றன.

//இருட்டுக்குள் ஆறு செல்லும் களகள ஒலியும் கைதை ஓலைகளில் காற்று செல்லும் ஒலியும் கேட்டன.   சின்னப்பெண்கள் பேசிச்சிரித்துச்செல்வது போல.//

//கொம்பனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள் என்று யாரோ கிளப்பிய கிண்டல் கிராமங்களில் பரவி பலரும் அதை நம்பினார்களாம்
பின்னர் இளையதம்புரானுக்குப் பின்னால் ஆணிக்கால் சரள்கல்லில் பட்டு வலிக்க எம்பி எம்பி பாய்ந்து சென்றார் ”வெட்டுக்வ்கிளி போவுந்நே” என்று அச்சிகளில் யாரோ சொல்ல ஒரே சிரிப்பு.//

கதையின் கடைசி ஓட்டத்தில் வரப்பில் கண்ணயர்ந்த பரமண்ணாவின் கனவு, பரமண்ணாவைப் போல் என்னையும் திடுக்கிடச் செய்கிறது.

ஏதோ அர்த்தமற்ற கனவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயல்வது போல, இதற்குள்ளும் பல விதமான அர்த்தங்களைத் தேடிப் பார்க்கிறேன், ஏதோ புலப்படுவது போலவும், பிடிபடாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகிறது.

//விக்ரமார்க்கன் கதையில் அவன் பாதாள லோகம் சென்று நாககன்னிகைகளைக் கல்யாணம் செய்துகொண்டு ஆயிரம் வருடம் வாழ்ந்து நூற்றியெட்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டு பிரிந்து திரும்பிவரும்போது பூமியில் ஒரு நொடிதான் ஆகியிருக்கும். அதுபோல ஒரு மாய அனுபவம்.//

ஆம்... ஜெயமோகனின் இந்த வார்த்தைகளைப் போல், அவரின் மத்தகமும் ஒரு மாய அனுபவம், மகானுபவம்!!!

________________________________________________________________
ஜெயமோகனை வாசிக்கத் தூண்டிய முரண்தொடை 'அதுசரி'க்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மத்தகம் பற்றிய அதுசரியின் இந்த இடுகையையும் முடிந்தால் பாருங்களேன்! அங்கேயே மத்தகத்தின் இணைப்புகளும்! 
________________________________________________________________