டைட்டில்ல A MANI RATNAM FILM அப்டின்னு விதம் விதமான ஃபாண்ட் சைஸ்ல பளிச்சுன்னு போட்டுக் காண்பிச்சாலும்... நெசம்மாவா? மணி ஃபில்ம்மா?.. அந்தப் ஃபாண்ட் பார்த்தே பாழாப்போன டவுட்டு வந்து தொலைக்குது... ஹ்ம்ம்.. எல்லாம் பழக்கதோஷம்.. (ஆமா.. நான் ஆன்லைன்ல பார்த்ததால அப்டித் தெரியுதா..? இல்ல க்ராஃபிக் டிஸைனரோட ஆர்வக் கோளாறா..? மணிக்கு அது புடிச்சிருந்திச்சா..?!)
ச்ச்செரி.. அது கெடக்கு... ஆனா எனக்குப் படம் புடிச்சுதுங்க... ஏன் அப்டின்னு அசட்டுப்பிசட்டுன்னு கேக்கப்டாது.. நம்ம ஊர்ல பொங்கல் சாப்டறப்போ.. சில நேரத்தில திகட்டினாலும்.. அதில இருக்கிற முந்திரிப்பருப்பும்.. திராட்சை வத்தலும் பொறுக்கிச் சாப்டுறதுக்காகவே... மூணு வேளையும் பொங்கல்ப் பானையச் சுத்தி வர்ற சென்மமுங்க நானு..
ஹிஹி... நான் பெண்ணீயவியாதி இல்லைன்னாலும்... இங்க முதல்ல ஐஸுவ சொல்லியே ஆவணும்.. படம் ஆரம்பிக்கறப்போ.. சிறக விரிக்கிற அந்தக் கழுக பார்த்து மிரண்டுக்கிட்டே.. அதை க்யூட்டா பார்க்கறதில ஆரம்பிக்குது ஐஸுவோட அழகான கலக்கல்...
"ஆம்பள கூடப் போராட வக்கில்ல".. என்று பயத்தை மறைத்துச் சீறும் போதும்.. "ஜயமுண்டு பயமில்லை மனமே.. ".. என்று பாரதியார் பாடலை அழுத்தி உச்சரிக்கும் போதும்.. கறுப்புத் துணியால்க் கட்டப்பட்ட கண்களை மீறி.. உதடுகளும்.. கன்னங்களும் வெளிப்படுத்தும் நடிப்பு... பப்பப்பப்பா...
துப்பாக்கியைப் பார்த்து அசையும் நயனங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு.. "என்னைக் கொல்றதுக்கு நீ யாரு?"-லிருக்கும் ஆதங்கம்.. கடைசியாக.. விழுந்து கொண்டிருந்த விக்ரமை நோக்கி நீளும் கைவிரல்களின் பிடிவாதம்.. இயலாமை.. கைவிரல்கள்.. கண்ணிமை முடிகள்... எல்லாமே நடிக்கின்றன... காட்டுச்சிறுக்கி... மிகப் பொருத்தம்..
பக்பக்பக்.... டண்டண்டண்டண்... டண்டனக்கா.. டண்டனக்கா.. சுடுசுடுசுடு... விடுவிடுவிடு... போன்ற மேனரிஸம்.. மிகையாகத் தோன்றுவதற்கு... சுஹாசினியைப் பொறுப்பாக்கினால்... விக்ரம் கனகச்சிதம்... "ய்யேய்.. முட்டாப்பய மவளே" என்று பதைத்துப் போவதும்... "பதிவுற்ற குலசக்தி சரணுண்டு" என்று நிறுத்திப் "பகையில்லை" என்று தொடர்வதிலிருக்கும் உச்சரிப்பிலிருக்கும் அழகும்.. "நீங்க கண்ணைத் திறந்த உடன என் உசிரு என் கிட்டத் திரும்பி வந்திருக்கக் கூடாது" என்று அந்த முரட்டு உருவத்தினூடு மென்மையாக அங்கலாய்ப்பதும்.. "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்.. "குருவம்மோய்.. குருவம்மோய்".. என்று சீண்டுவதும்.. ஃபன்டாஸ்ட்டிக்...
ப்ருத்வி... பேபி ஃபேஸ் வச்சுக்கிட்டே.. இப்டி ஒரு குரூரம் வெளிப்படுத்த முடியுமென்று காண்பித்ததுக்கு சபாஷ்.. கை வெட்டுப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தவன் கையை நிமிண்டியபடி பேசும் ஒரு காட்சி போதும்.. யப்பா... ஆனா... இங்கயும் வசனமா.. இயக்கமா... என்ன கோளாறோ... கட்டிவைத்திருக்கும் ஒருவன் தொண்டை வறண்டு போக விளக்கம் சொல்லுவானாம்.. இவரு மெதுவா கேட்டுக்கிட்டே அடி அடியா எடுத்து வச்சு வருவாராம்.. அப்புறம் திடீருன்னு ஆயிரம் கிலோமீட்டர் ஓடி வந்த மாதிரி இளைச்சுக்கிட்டே.. "அவங்கள பாத்தீங்களா? எப்டி இருந்தாங்க?" என்று பதைபதைப்பாராம்.. டூ மச்.. செயற்கைத்தனம்...
கார்த்திக்.. அடுத்த காமடி பீஸ்... வால் வைக்கல... சஞ்சீவி மலையைக் கைல கொடுத்து.. தூக்கச் சொல்லலை... மத்தபடி நாந்தேன் அனுமாரு அப்டின்னு காண்பிக்கறதுக்காக அவரு பறந்து பறந்து கிடைச்சதில எல்லாம் தொங்குவதும்.. கிரிகிரிகிரி உட்டாலங்கடி கிரிகிரிம்பதும்... எரிச்சல்..
"ஆட்ட வெட்டிச் சூப்பு வைக்கச் சொல்லுதீய.. நெஞ்செலும்பு சூப்பு வைக்கேன்".. "சோக்கடிச்சா சிரிக்கறதில்ல.. துப்பாக்கி காட்டினா பயப்டறதில்ல... என்ன வாழ்க்கைடா சாமி.." பிரபு க்யூட்...
பிரியாமணி தைரியமா வந்து.. "மய்யிரு.. மாட்டிட்டேன்... ஏன் பேசப்டாதோ" .. என்று எகிறி.. "எல்லாம் போச்சு.." .. பரிதாபமா செத்துப் போறா... ரஞ்சிதா பரிதாபமா இருக்கா... ம்ம்..
அழகான லொகேஷன்.. அருமையான காட்சி அமைப்பு... ஒளிப்பதிவு.. அந்தச் சிலை.. மலை... அருவி... பள்ளத்தாக்கு... பாலம்.. காடு.. கழுகு... ஐஸ்வர்யா.. ஸ்க்ரீன் முழுக்க வியாபித்திருக்கும் விக்ரமின் பராக்கிரம முதுகு... எல்லாம் இருந்தும்... ஏதோ நெருடல்... திருப்தியாக இல்லை... என்னவோ மிஸ்ஸிங்.. .
என்னது? அப்டின்னு யோசிச்சா..ம்ம்... சுஹாசினி மேடம்ம்.. அவ்வ்வ்... படத்தைத் தூக்கி படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் நின்ற இடத்தில் நிறுத்த வேண்டிய கதை வசனம்... மொத்தத்தையும் அறுந்த பாலத்துடன் விழுந்த ப்ருத்வி நிலமைக்கு ஆளாக்கி விடுகிறது... "என் முடிவு உன் கைல இல்லை.." என்று சொல்லிவிட்டு ஆற்றில் விழுந்திருந்தா நச்-ன்னு இருந்திருக்குமா இல்லையா.. கூடவே... "நான் சாகமாட்டேன்..".. அப்டின்னும் எதுக்கு சொல்லணும்கிறேன்.. பாலத்தில தொங்குறப்போ... விக்ரம் ஐஸ் பத்தி நறுக்குன்னு ஒரு வார்த்தை நல்லதா சொன்னா போதாதா... வேற என்ன... "தங்கம்.."... வேற என்ன.. "வைரம்..".. அலுப்பா இருக்கு.. விக்ரம் சிரிக்க சிரிக்கப் பேசுவாரு அப்டிங்கிறாங்க.. அது எப்டின்னு அவரு நம்பியார் மாதிரி மிமிக்ரி செஞ்சு காண்பிக்கிறாரு... என்னாத்தச் சொல்ல..
ம்ம்... எப்டியோ.. ஆரம்பத்திலயே சொன்ன மாதிரி எனக்குப் படம் புடிச்சதுங்க.. ஆனா மணிரத்னம் சார்.. இவ்ளோ துணிச்சலா ஒரு கதைய சொல்றீங்க... ராவணன் பக்கத்தில இருந்து சொல்றீங்க... ரயில்ல சங்கிலிய புடிச்சு இழுத்து நிறுத்துற மாதிரி... நச்-ன்னு... முடிச்சிருக்கலாமின்னு எனக்கு ஒரே ஆதங்கமாத்தேன் இருக்கு...
ஆனாலும்... ஹூரே ராவணா...~
__________________________________________________________________